மூத்த டைரக்டர் கே.விஸ்வநாத் மறைவு; கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்

இந்தியத் திரையுலகின் மூத்த டைரக்டர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1965-ம் ஆண்டில் இயக்குனராக அறிமுகமான கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான ஆத்ம கவுரவம் படத்துக்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி விருதை வென்றார். சங்கராபரணம், சாகர சங்கமம், சுவாதி முத்யம், ஸ்வர்ண கமலம் போன்ற படங்களை இயக்கி உள்ளார். சென்னையில் ஆடியோகிராபராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், அவர் ஒலி பொறியாளர் ஆனார். 1951 இல் பாதாள பைரவி மூலம் தெலுங்குத் துறையில் அறிமுகமானார். 1965 ஆம் ஆண்டில், அவர் இயக்குநராக அறிமுகமான ஆத்ம கவுரவம், இது மாநில நந்தி விருதை வென்றது.

தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ’விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது. 7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பவன் கல்யாண் மற்றும் கே ராகவேந்திர ராவ் ஆகிய நடிகர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.அவரது மறைவுக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!