சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குனராக வலம் வந்த ஜூடோ ரத்தினம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேல் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். 92 வயதான ஜூடோ ரத்தினம், உடல்நல குறைவால் நேற்று உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை வடபழனியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளரான ஜூடோ ரத்தினம் மறைவையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளரான ஜூடோ ரத்னம் (92) வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றி கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்ற ஜூடோ ரத்னம், போக்கிரி ராஜா, தலைநகரம் போன்ற திரைப்படங்களில் நடிகராகவும் மிளிர்ந்தார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்களின் பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர் ஜூடோ ரத்னம். பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கலையுலகிலும் அரசியல் உலகிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி மறைந்துள்ள ஜூடோ ரத்னம் மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தார்க்கும் திரையுலக, அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள இடுகாட்டில் இன்று மாலை 3 மணி அளவில் அவருடைய உடல் தகனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.








  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!