தொடரும் சமூக அநீதி.. தமிழக காவல் துறைக்கு இயக்குனர் பா.இரஞ்சித் கண்டனம்..

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கை வயல் பகுதியில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு கடந்த 27-ந்தேதி அந்த கிராமத்தில் ஆய்வு செய்தார். அப்போது பட்டியலினத்தை சேர்ந்த மக்களை அங்குள்ள அய்யனார் கோவிலில் வழிபட அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. பின்னர் அவர்களை கலெக்டர் கவிதா ராமு கோவிலுக்கு அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தார்.

அப்போது அதனை விமர்சித்து சாமியாடியவாறு சிங்கம்மாள் என்ற பெண் அவதூறாக பேசினார். இதே போல் அங்குள்ள டீக்கடையில் இரட்டைக்குவளை முறை பயன்பாட்டில் இருந்தை பார்த்து அந்த கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை இருப்பதை கலெக்டர் உறுதி செய்தார். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இறையூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்கம்மாள் மற்றும் டீக்கடை உரிமையாளர் மூக்கையா ஆகியோர் சாதிய பாகுபாடு காட்டியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினர். அதனை நீதிபதி சத்தியா தள்ளுபடி செய்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது போன்ற சாதிய கொடுமைகளில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இயக்குனர் பா.இரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்!

தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்!! “என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.










  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!