டிரைவர் ஜமுனா – விமர்சனம்

‘கால் டாக்ஸி’ டிரைவரான ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தை, தாய், தம்பி என நிம்மதியாக வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவருடைய தந்தையும் வாடகை கார் ஓட்டுபவராக இருந்தவர். திடீரென ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை மரணம் அடைகிறார். அவரை கூலிப்படையினர் கொடூரமாக வெட்டி கொலை செய்து விடுகின்றனர். தந்தையின் படுகொலை அந்த குடும்பத்தையே உலுக்குகிறது.     இதனால் தம்பி ஊரை விட்டு செல்கிறார், தாய் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார். இந்த சம்பவத்தால் அந்த குடும்பமே சீரழிந்து விடுகிறது. தந்தையை கொலை செய்த கும்பலை பழி தீர்க்க ஐஸ்வர்யா ராஜேஷ் முடிவு செய்கிறார். அவரது தந்தையின் கொலைக்கு காரணம் என்ன? யார் இவரை கொலை செய்கின்றனர்? அந்த கொலையாளிகளை ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது மீதிக்கதை.  

எளிமையான குடும்பத்து பெண்ணாக நடித்து அசத்தியிருக்கிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். கதாப்பாத்திரத்திற்கு மிக அழகாக தன்னை பொருத்தியிருக்கிறார். கார் ஓட்டுனர் பணியில் இருக்கும்போது எதிரிகளிடம் தன் எதிர்ப்பை உடல் மொழியால் வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி பாராட்டை பெறுகிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் இவரின் கடின உழைப்பு தெரிகிறது.   அரசியல்வாதி கதாப்பத்திரத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார். அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனி அவர் பணியை சரியாக செய்துள்ளார். மேலும் அபிஷேக்குமார், கவிதா பாரதி, இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் ஆகியோர் இயல்பான நடிப்பால் தங்கள் கதாபாத்திரத்தை மிளிரச் செய்கிறார்கள்.  

எளியவர்களால் வலியோரை வீழ்த்த முடியும் என்று ஒற்றை வரியை மையப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கின்ஸ்லின். படத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் பிறகு படம் வேகமெடுக்கிறது. பழிவாங்கலுக்குரிய விறுவிறுப்பு திரைக்கதையில் இல்லாதது பார்வையாளர்களை ஏமாற்றமடைய செய்கிறது. பெரும்பாலும் காரில் நடக்கும் கதை என்பதால் அதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர். சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் கலந்து கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.   காரில் நடக்கும் சம்பவங்களை சிறப்பாக காட்சிப்படுத்தி பாராட்டை பெறுகிறார் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு உரித்தான பின்னணி இசையை கொடுத்து விறுவிறுப்பை கூட்டியுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.   மொத்தத்தில் டிரைவர் ஜமுனா – விறுவிறுப்பு.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!