உடன்பால் – விமர்சனம்

சார்லிக்கு லிங்கா, தீனா என்று இரண்டு மகன்களும், காயத்ரி என்ற மகளும் இருக்கிறார். மகன் லிங்கா கடனில் சிக்கி கஷ்டப்படுகிறார். கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திரும்ப தரவேண்டும் என்பதால் வீட்டை விற்று பணம் கொடுக்க சொல்லி தந்தை சார்லியை நிர்ப்பந்திக்கிறார். இதனை ஒப்புக்கொள்ளாத சார்லி மறுத்து விடுகிறார்.
 
இதனிடையே சார்லி சென்றிருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து அதில் பலர் இறந்துவிடுகின்றனர். அதில் சார்லியும் சிக்கி இறந்து போனதாக குடும்பத்தினர் ஒப்பாரி வைக்கின்றனர். இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களுக்கு அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் உதவி தொகை கொடுப்பதாக அறிவிக்கிறது. அந்த பணத்தை பங்கிட்டு பிரித்து கொள்வதில் லிங்காவும், காயத்ரியும் மோதிக் கொள்ள, சார்லி உயிருடன் வந்து அனைவரையும் அதிர வைக்கிறார்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் வீட்டிலேயே சார்லி இறந்து போகிறார். இறந்த சார்லியின் பிணத்தை வைத்து அரசாங்கத்திடம் பணம் பெறுகின்றார்களா? தன் அப்பாவின் இறுதி சடங்கை எப்படி செய்கின்றனர்? பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை. லிங்கா இயலாமை, பாசம், கடன் தவிப்புகளை யதார்த்தமாக வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார். அபர்ணதியும், காயத்ரியும் கதாபாத்திரங்களில் நிறைவாக உள்ளனர். காயத்ரி கணவராக வரும் விவேக் பிரசன்னாவின் குசும்புத்தனங்கள் படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது.
 
பொறுப்பான குடும்பத் தலைவர் கதாபாத்திரத்தில் சார்லி வாழ்ந்து இருக்கிறார். இந்த கதாப்பாத்திரத்திற்கு சார்லியை தேர்வு செய்தது பலம். பேரக் குழந்தைகளுடன் விளையாடுவதிலும் வீட்டை விற்க மறுக்கும் வைராக்கியத்திலும் அவரது அனுபவ நடிப்பு கைத்தட்டல்கள் பெறுகிறது. சகோதரியாக வரும் தனம், சார்லியின் இன்னொரு மகனாக வரும் தீனா, ஒரு காட்சியில் மட்டும் வந்து போகும் மயில்சாமி கதாபாத்திரங்களும் சிறப்பு. ஒவ்வொருவரின் நடிப்பும் கதைக்கு உயிர் ஊட்டி உள்ளனர்.
 
நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார சிக்கல்கள் உறவுகளை எப்படி சிதைக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சீனிவாசன். பெரும்பகுதி கதை வீட்டுக்குள்ளேயே முடங்குவதை தவிர்த்து இருக்கலாம். படத்தின் கதாப்பாத்திர தேர்வு பாராட்டுக்குறியது. சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மதன் கிறிஸ்டோபரின் கேமரா சிறிய வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை படமாக்குவதில் உதவியிருக்கிறது. சக்தி பாலாஜியின் இசையும் படத்திற்கு பக்க பலம். மொத்தத்தில் உடன்பால் – ரசிக்கலாம்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!