கட்சிக்காரன் – விமர்சனம்

நாயகன் சரவணன், தனது கட்சியின் தலைவருக்காக முழு விசுவாசத்துடன் உழைக்கிறான். போஸ்டர் ஒட்டுவது, கொடி கட்டுவது, தோரணம் கட்டுவது, கோஷம் போடுவது, கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது, விழாக்கள் ஏற்பாடு செய்வது என்று மும்மரமாக ஈடுபடுகிறான். இவற்றுக்கெல்லாம் செலவுக்குப் பணம் இல்லாத போது தன் மனைவியின் தாலியை அடகு வைக்கக் கூட தயங்காமல் வேலை பார்க்கிறான்.  

சரவணனின் உழைப்பைப் பாராட்டி அவனுக்குத் தேர்தலில் கவுன்சிலர் பதவியில் போட்டியிட வாய்ப்பு வருகிறது. ஆனால் கடைசி நேரத்தில் எதிர்க்கட்சியிலிருந்து கட்சி மாறிய ஒருவனுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டு விடுகிறது.   இதனால் கவலைப்படும் சரவணன் ஏமாற்றப்பட்ட தலைவனிடம் நியாயம் கேட்டுப் போராடுகிறான். அது மட்டுமல்ல தன்னைப் போல ஏமாற்றப்பட்டவர்களை ஒன்று திரட்டிக் கொண்டு போராடுகிறான். அரசியல்வாதிகளின் மிரட்டல் போக்கால், அவன் கூட வந்தவர்கள் இடையில் கழன்று கொண்டாலும் அவன் உறுதியாக நிற்கிறான். இறுதியில் சரவணனின் போராட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

  சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் விஜித் சரவணன், அப்பாவி முகமும் வெள்ளந்தி குணமும் சரியாக அமைந்து இருக்கிறது. ஆனால், நடிப்புதான் கொஞ்சம் சரியாக அமையவில்லை. மனைவி அஞ்சலியாக நடித்திருக்கும் ஸ்வேதா டாரதி அப்பாவி கட்சித் தொண்டனின் மனைவியாக சரியாகப் பொருந்துகிறார்.   மக்கள் கட்சித் தலைவராக வரும் சிவ சேனாதிபதி, உதவியாளராக வரும் அப்புகுட்டியும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.    

ஒரு கட்சியில் சேர்ந்து அந்த தலைவரின் மீது விசுவாசம் வைத்து உண்மையாக உழைத்து தனது வாழ்க்கையை இழந்த ஒரு தொண்டன், தனக்கு அதே கட்சித் தலைவர் மூலம் பாதிப்பு நேரும்போது எதிர்த்து நின்று கேள்வி கேட்பதும் தனக்கான இழப்பீடு கேட்பதும்தான் கட்சிக்காரன் படத்தின் கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ப.ஐயப்பன். பல பெரிய கதாநாயகர்கள் சொல்லத் தயங்கும் பல வசனங்களை துணிச்சலாக வைத்து இருக்கிறார். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.    

ரோஷன் ஜோசப், சி.எம். மகேந்திரா இசையில் ‘கட்சிக்காரன் கட்சிக்காரன்’ என்கிற பாடலை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. மதன் குமார் ஒளிப்பதிவு அதிகம் பலிச்சிடவில்லை. மொத்தத்தில் கட்சிக்காரன் – சுமாரானவன்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!