ரிப்பீட் ஷூ – விமர்சனம்

நாயகன் திலீபன் ஒரு விஞ்ஞானி. இவர் டைம் டிராவல் செய்யும் மிஷின் ஒன்றை கண்டுபிடித்து தனது ஷூவுடன் இணைக்கிறார். இந்த மிஷின் பொருந்திய ஷூவை சோதனை செய்யும் பொழுது எதிர்பாராத விதமாக போலீசாரிடம் மாட்டிக்கொள்கிறார். அப்பொழுது இந்த ஷூவை ஒரு மரத்தடியில் மறைத்து வைத்துவிட்டு செல்கிறார். இந்த ஷூ செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகள் கையில் கிடைக்கிறது. அவளிடம் இருந்து யோகி பாபு அந்த ஷூவை வாங்கி அணிகிறார்.

அதன்பின் அவர் வாழ்க்கையை மாறிவிடுகிறது. இதற்கிடையே ஒரு கும்பல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி வருகிறது. அப்போது குடிகாரரான செருப்பு தொழிலாளி தனது மகளை பணத்திற்காக அந்த கும்பலிடம் விற்றுவிடுகிறார். இந்த கும்பலிடம் இருந்து அந்த சிறுமி எப்படி தப்பிக்கிறார்? அவர் வாழ்க்கை என்ன ஆனது? திலீப்பன் தனது டைம் டிராவல் மிஷின் ஷூவை மீட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக வரும் திலீப்பன் தனது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். சிறுமியை காப்பாற்றும் காட்சிகளில் ரசிக்க வைத்துள்ளார். யோகிபாபு தனக்கான காமெடி பாணியை பின்பற்றி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். சிறுமியாக வரும் பிரியா கதைக்கான எதார்த்த நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார். டெக்னிகலாக இந்த படத்தை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் கல்யாண். முதல் பாதியில் விறுவிறுப்பாக நகரும் கதை இரண்டாம் பாதியில் ரசிகர்களை கவனிக்க வைக்க தவறியுள்ளது.

கிளைமேக்ஸ் காட்சிகள் பெரும்பாலும் ஒரு இடத்தை நோக்கி நகர்வது சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளது. ஜேக்கப் ரத்தினராஜ், ஜெமின் ஜோம் அய்யனேத் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மொத்தத்தில் ‘ரிப்பீட் ஷூ’ – முயற்சி தேவை


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!