சித்தாந்தங்களை வாய் கிழிய பேசுவார்கள்.. ஆனால்..- இயக்குனரை மறைமுகமாக தாக்கிய பிரபல இசையமைப்பாளர்

இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஷான் ரோல்டன். இவர் “வாயை மூடி பேசவும்” படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின், முண்டாசுப்பட்டி, ஜோக்கர், பா.பாண்டி, மெஹந்தி சர்க்கஸ், வேலையில்லா பட்டதாரி-2, ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் மிகவும் பிரபலடைந்தார்.

இந்நிலையில் ஷான் ரோல்டன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், என் நண்பர் இயக்குனர் ஒருவர் கம்யூனிச சித்தாந்தத்தை தன் உயிர்மூச்சாய் கொண்டவர். எங்கள் பிணைப்பையும், கலை சாரந்த கெமிஸ்ட்ரியையும் இந்த திரையுலகம் நன்கு அறியும். ஆனால், அவரும் இன்று வியாபார கோட்பாட்டுக்கு விலை போனது வருத்தத்தை அளிக்கிறது.

சிந்தாந்தங்களை இங்கு வாய் கிழிய பேசுவார்கள். ஆனால், நடைமுறையில் இவையெல்லாம் நம் தமிழ்நாட்டில் போணியாவதில்லை என்பதே நிதர்சனம். இனி, சிந்தாந்தம் என்ற பெயரில் வாய் செவிடால் விடுபவர்களை புறக்கணியுங்கள். மார்க்கெட் தான் நம் கடவுள் என்று பதிவிட்டுள்ளார். இவர் குறிப்பிட்டிருக்கும் அந்த இயக்குனர் யார் என்று? பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு சிலர் அவர்களுக்கு மனதில் தோன்றும் இயக்குனர்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகின்றனர். இருந்தும் அவர் சொல்லியிருக்கும் அந்த இயக்குனர் யார் என்பது அவர் பதிவிட்டால் மட்டுமே தெரியும் என்றும் இணையத்தில் பேசி வருகின்றனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!