ஆளாளுக்கு ஒரு காரணம்.. லைகர் படத்திற்கு எதிராக டிரெண்டாகும் ஹேஷ்டேக்

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

லைகர் படத்தின் புரொமோஷனில் தொடர்ச்சியாக கலந்துக் கொண்டு வரும் விஜய் தேவரகொண்டா. அவர் அளித்த பேட்டி ஓன்றில், ”ஒரு படத்தில் நடிகர், இயக்குனர் மற்றும் நடிகையைத் தவிர, வேறு பல முக்கியமான கதாபாத்திரங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். 200, 300 நடிகர்கள் வேலை செய்கிறார்கள். அனைத்துப் பிரிவுக்கும் ஊழியர்கள் இருக்கிறார்கள்.

அதனால், ஒரு திரைப்படம் பலருக்கு வேலை வாய்ப்பையும், பலருக்கு வாழ்வாதாரத்தையும் தருகிறது. அமீர்கான் ‘லால் சிங் சத்தா’வை உருவாக்குகிறார் என்றால், ஒரு நட்சத்திரமாக அவரது பெயர் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், அதில் 2000, 3000 குடும்பங்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டிருக்கிறது.

நீங்கள் ‘லால் சிங் சத்தா’ படத்தை புறக்கணிக்கும்போது, அதன்மூலம் நீங்கள் அமீர்கானை மட்டும் பாதிக்கவில்லை. மாறாக, நீங்கள் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வேலை மற்றும் வாழ்வாதாரத்தையும் சேர்த்தே பாதிக்கிறீர்கள். கூடவே பொருளாதாரத்தை பாதிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளவும். பாய்காட் எதற்காக, ஏன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், தவறான புரிதலுக்காக நடக்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக் (HashTag) ஒன்றை வைரலாக்கி வருகின்றனர். லால் சிங் சத்தா படத்திற்கு ஆதரவு தெரிவித்து விஜய் தேவரகொண்டா பேசியது மற்றும் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு இந்த படத்தை புறக்கணிப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!