நதி – விமர்சனம்

எளிய குடும்பத்தில் பிறந்து தங்களை ஆட்டோ ஒட்டி வளர்த்தெடுக்கும் தந்தைக்கு ஓய்வு கொடுத்து, தன்னுடைய விளையாட்டு திறமையின் மூலம் குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல விரும்புகிறார் தமிழ் (சாம் ஜோன்ஸ்).

இவர் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் சக மாணவியான பாரதி (கயல் ஆனந்தி) இவறின் தனித்திறன் பார்த்து அவருடன் நட்பாக பழகுகிறார்.  இவர்களின் நட்பு ரீதியான பழக்கத்தை பாரதியின் பெரியப்பாவும், அரசியல்வாதியுவுமான முத்தையா (வேல.ராமமூர்த்தி), அவரது தம்பி (ஏ.வெங்கடேஷ்), மகன் (பிரவீன்குமார்) ஆகியோர் தவறாக புரிந்துக் கொண்டு காதலிப்பதாக நினைக்கின்றனர். இதனால் தமிழை அவர்கள் என்ன செய்தார்கள்? இவர்களின் பழக்கம் என்ன ஆனது? அதன்பிறகு தமிழ் எதிர்கொண்ட வாழ்க்கை என்ன ஆனது? குடும்பத்தை அவர் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றாரா? என்பதே படத்தின் மீதிகதை.

கிராமத்து பின்னணியில் நடக்கும் கதையை உள்ளூர் அரசியல், வர்க்கம், சாதி பெருமை, துரோகம் என தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குனர் தாமரைச் செல்வன். நேர்த்தியான திரைக்கதை அமைத்து படத்தை விறுவிறுப்பு குறையாமல் கொடுத்து ரசிக்க வைத்துள்ளார். கதாபாத்திரங்களை வலிமையாக அமைத்து கூடுதல் கவனம் பெற்றிருக்கிறார். நண்பனை காப்பாற்றப் போராடும் ஆனந்தியின் கதாபாத்திரம் படத்திற்கு வலுசேர்த்துள்ளது.

சில இடங்களில் தொய்வு இருந்தாலும் படத்திற்கு சருக்கலாக அமையவில்லை. நாயகனாக நடித்திருக்கும் சாம்ஜோன்ஸ், நடுத்தர வர்க்க இளைஞன் வேடத்துக்கேற்ப பொருத்தமாக அவரின் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தை தாங்கி சுமக்கும் கதாப்பாத்திரத்தில் பார்வையாளர்களுக்கு அறிமுக நாயகனாக தோன்றாதபடி நடித்துள்ளார்.

பாராட்டுக்கள் இருக்கிறார். பாரதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்தி படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்த்துள்ளார். நீதிமன்ற வளாகத்தில் இடம்பெறும் காட்சியில் எதார்த்தமாக நடித்து கூடுதல் கவனம் பெற்றுள்ளார். சாதிய மனநிலையை தாங்கி பிடிக்கும் கதாப்பத்திரத்தில் நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி முதிர்சியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

வசனங்கள் வழியாக வாழும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கரு.பழனியப்பன் கவனம் ஈர்த்துள்ளார். ஒரு சாமானியக் குடும்பத்தின் தந்தையாக நகைச்சுவைக்கு வெளியே நின்று குணச்சித்திர நடிப்பை முனீஸ்காந்த் கொடுத்திருக்கிறார். கிராமத்து கதையை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு. சில இடங்களில் கிராமத்தை விட்டு விலகியது போல் தோன்றினாலும் அது படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பின்னணி இசையை படத்திற்கு பொருந்தும் வகையில் திபு நினன் தாமஸ் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் நதி கட்டுக்கடங்காதது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!