விதி மதி உல்டா – சினிமா விமர்சனம்


சென்னையில் நாயகன் ரமீஸ் ராஜா வேலைக்கு ஏதும் போகாமல் வீட்டில் ஜாலியாக இருந்து வருகிறார். இவருடைய அப்பாவான ஞானபிரகாசம், புரோக்கர் சென்ட்ராயனுக்கு கமிஷன் தரவில்லை. இதனால், ரமீஸ் ராஜாவை கடத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறார் சென்ட்ராயன்.

இதற்கிடையில், நாயகி ஜனனி ஐயரை சந்திக்கும் ரமீஸ் ராஜா, அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை ஜனனியிடம் சொல்ல, முதலில் மறுக்கும் அவர் பின்னர் ரமீஸ் ராஜாவின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.

மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார் டேனியல் பாலாஜி. இவரது ஒரே தம்பி, ஜனனி ஐயரை ஒரு தலையாக காதலித்து வருகிறார். இவரது காதலை ஜனனி ஏற்காததால் ஆட்களை வைத்து கடத்தி, ஒரு பாழடைந்த கம்பெனியில் அடைக்கிறார்கள். அதேநேரத்தில், ரமீஸ் ராஜாவும் சென்ட்ராயனால் கடத்தப்பட்டு, ஜனனி இருக்கும் அதே இடத்திற்கு அழைத்து வரப்படுகிறார்.

அதுபோல் திருடனான கருணாகரன், தான் திருடி, பதுக்கி வைத்த தங்க நகைகளை எடுப்பதற்காக அந்த பாழடைந்த கம்பெனிக்கு வருகிறார். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தஞ்சம் அடைகிறார்கள்.


அப்போது ஒருவருக்கொருவர் இடையே ஏற்படும் மோதலில், எதிர்பாராத விதமாக டேனியல் பாலாஜியின் தம்பி சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த விஷயம் டேனியல் பாலாஜிக்கு தெரிந்து, தம்பி இறப்புக்கு ரமீஸ் ராஜாதான் காரணம் என்று நினைத்து அவரது அப்பா, அம்மாவை கொலை செய்கிறார்.

மேற்குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் ரமீஸ் ராஜாவின் கனவில் நடந்தவை. இந்த கனவு, அப்படியே நிஜத்தில் நடக்க ஆரம்பிக்கிறது. தான் கடத்தப்படுவது, ஜனனி கடத்தப்படுவது, அம்மா, அப்பா கொலை செய்யப்படுவது இவை அனைத்தையும் தெரிந்து கொண்ட ரமீஸ் ராஜா, இவற்றை தடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை,

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ரமீஸ் ராஜா, துறுதுறுவான நடிப்பாலும், வெகுளித்தனமான நடிப்பாலும், ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நடனம், காதல், போலீசிடம் அடிவாங்குதல் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். கனவில் நடந்ததை நிஜத்தில் நடக்கவிடாமல் தடுக்க இவர் எடுக்கும் முயற்சிகள் பரிதவிக்க வைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் ஜனனி, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சிவரை படத்தில் பயணிக்கிறார். முதல் காட்சியிலேயே ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் இவரது முக பாவனைகள் ரசிகர்களை சீட்டில் இருந்து எழுந்திருக்க விடாமல் தடுத்திருக்கிறது.


வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் டேனியல் பாலாஜி. அதுபோல் கருணாகரனும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார். சென்ட்ராயன், ஞானபிரகாசம், சித்ரா லட்சுமணன், குட்டி கோபி, லோகேஷ், ஆதித்யா கதிர் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

நாளை நடக்க இருப்பது முன்னாடியே தெரிந்தால் நல்லா இருக்கும் என்று சொல்லுபவர்கள், நிஜத்தில் அப்படி மாறிவிட்டால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய் பாலாஜி. இதுபோன்ற கதைகள் ஏற்கனவே வந்திருந்தாலும், இப்படத்தில் காமெடியுடன் சொல்லிருக்கிறார். இதுபோன்ற கதைகளை உருவாக்க ஒரு தைரியம் வேண்டும். ஒரு இடத்தில் சிறு பிழை நடந்தாலும், படத்தின் கதையே மாறிவிடும். அப்படி ஏதும் தவறு நேராமல் படத்தை இயக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களை திறமையாக கையாண்டிருக்கிறார்.

அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் ‘தாறு மாறா…’ என்ற பாடல் தாளம் போட வைக்கிறது. குறிப்பாக கருணாகரனுக்கான பாடலும் அதை படமாக்கிய விதமும், மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவும் ரசிக்க வைக்கிறது. அதுபோல், ரமீஸ் ராஜா, ஜனனியின் ரொமான்ஸ் பாடலும் கேட்கவும் பார்க்கவும் தெளிவாக உள்ளது.

மொத்தத்தில் ‘விதி மதி உல்டா’ காமெடி கலாட்டா. – Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!