95 நாட்கள் சுயநினைவின்றி இருந்த மீனாவின் கணவரை காப்பாற்ற முடியவில்லை- அமைச்சர் தகவல்

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து 4 மணி நேரம் நின்று பொதுமக்களுக்கு 50 ஆயிரம் முக கவசங்களை இலவசமாக வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்க முக கவசங்கள் அணியுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கூட்டம் எங்கு கூடினாலும் அங்கு முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை. ஆனால் கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் அந்த கட்சி தான் முக கவசம் வழங்க வேண்டும். அவர்களது கட்சிக்காரர்களை அவர்கள்தான் பாதுகாக்க வேண்டும்.

நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் இறந்ததாக சொல்லப்படுவது தவறாகும். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா வந்தது. எனவே நேற்று கொரோனா பாதிப்பால் அவர் இறக்கவில்லை. மீனாவின் கணவருக்கு கடந்த டிசம்பர் மாதம் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.

வீட்டிலேயே ஆக்சிஜன் உதவியுடன் இருந்தார். டிசம்பர் மாதம் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். 6 மாதம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தார். அவருக்கு இருதயம், நுரையீரல் ஆகிய இரு உறுப்புகளும் செயல் இழந்து விட்டது. 95 நாட்கள் சுயநினைவின்றி எக்மோ சிகிச்சையில் இருந்தார். 15 நாட்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பெற்ற தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தேன்.

அவரது நிலைமை மோசமாகவே இருந்தது. உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு யாராவது தானம் செய்தால் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தியா முழுவதும் அவருக்கான உடல் உறுப்பு எந்த ஊரிலும் கிடைக்கவில்லை.

மகாராஷ்டிரா, பெங்களூர் உள்பட பல இடங்களில் சொல்லி வைத்திருந்தோம். ஆனாலும் அவரது ரத்த வகை பொருந்தவில்லை. முதல்-அமைச்சர் உள்பட நாங்கள் எல்லோரும் அவரை காப்பாற்ற நிறைய முயற்சி செய்தோம். தமிழக அரசு எவ்வளவோ முயற்சித்தும் மீனாவின் கணவரை காப்பாற்ற முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் 31-வது மெகா தடுப்பூசி முகாம் வருகிற 10-ந்தேதி 1 லட்சம் இடங்களில் நடைபெற உள்ளதாகவும் சென்னையில் 3 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!