விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் – சினிமா விமர்சனம்


ஆந்திரா அமராவதி மாகாணத்தில் பழங்கால சிலை ஒன்றை ஷாயாஜி ஷிண்டே கண்டெடுக்கிறார். மிகவும் அற்புதமான இந்த சிலையை பல கோடி ரூபாய்க்கு விலை பேசி சென்னையில் உள்ள ஒருவரிடம் விற்க்கிறார்.

அதனை நாயகன் நாக அன்வேஷ் மற்றும் அவரது நண்பர் சப்தகிரி மூலம் சென்னைக்கு வேனில் அந்த சிலையை அனுப்பி வைக்கிறார் ஷாயாஜி ஷிண்டே. மர்ம பார்சல் என்று நினைத்து கொண்டு செல்லும் நாக அன்வேஷை செக்போஸ்டில் வைத்து போலீசார் மடக்குகின்றனர்.

போலீசில் இருந்து தப்பிக்கும் நாக அன்வேஷின் வேன் விபத்துக்குள்ளாக, அதிலிருந்து சிலை வெளியே வந்து விழுகிறது. சிலையை பார்த்த நாக அன்வேஷ் பிரமித்துப்போய், சிலையை வர்ணிக்க ஆரம்பிக்கிறார். நாக அன்வேஷின் புகழ்ச்சி உரையாடலால் அந்த சிலை அழகிய பெண்ணாக மாறுகிறார்.

பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நாக அன்வேஷ், அவருடன் பழக ஆரம்பிக்கிறார். நாளடைவில் இவர்களுக்குள் காதல் வருகிறது.


இறுதியில் அந்த பெண் யார்? அவர் சிலையாக மாற காரணம் என்ன? சிலையை கொடுத்து அனுப்பிய ஷாயாஜி ஷிண்டேவிற்கு இந்த விஷயம் தெரிந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

வாழ்க்கை என்பது மிகவும் குறுகிய காலம். அதில் விரைந்து சம்பாதித்து செட்டிலாக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கதாநாயகனாக நாக அன்வேஷ் நடித்திருக்கிறார். அவரது துறுதுறு பார்வையும், விறுவிறு நடிப்பும் இப்படத்திற்கு பெரும் பலம். நடனத்தை சிறப்பாக ஆடிய நாக அன்வேஷ், காதல் காட்சிகளில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

நாயகியாக ஹேபா பட்டேல் நடித்திருக்கிறார். தேவலோகத்து அழகியாகவும், பூலோக நற்குணம் கொண்ட பெண்ணாகவும் நடித்திருக்கிறார். தேவதை போன்ற அழகு முகம் கொண்டு, இப்படத்தின் கதைக்கு கூடுதல் பலத்தையும் சேர்த்திருக்கிறார்.

நண்பராக வரும் சப்தகிரியின நடை, உடை, பாவனைகள் மற்றும் காமெடிகள் ரசிக்க வைத்திருக்கிறது. பல காட்சிகளில் சிரிக்கவைத்திருக்கிறார்.

நாயகியின் அப்பாவாக சுமன், சிலை கடத்தல் ஷாயாஜி ஷிண்டே, ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


இப்படத்திற்கு, கதை எழுதி இயக்கியிருக்கும் கே.பழனி “பாகுபலி” படத்தில் ராஜமெளலியின் உதவியாளராம். மெகா பட்ஜெட் குருநாதரின் பெயரை இந்த மினிமம் பட்ஜெட்டில் பெரிதாகவே காபந்து செய்திருக்கிறார் “பாகுபலி” கே.பழனி என்றால் மிகையல்ல!

புராண கதையோடு வின்னுலம், பூலோகம் வாழ்க்கையையும் கலந்து காதல், ஆக்‌ஷன், காமெடியுடன் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.பழனி. பாகுபலி முதல் பாகத்தில் பணியாற்றியதால், அதே பாணியில் வித்தியாசம் காண்பித்து இயக்கி இருக்கிறார். முதல் பாதியில் காமெடி காட்சிகள் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒரு சில காட்சிகள் நம்பகத் தன்மை இல்லாமல் இருக்கிறது.

வி.பிரபாகரின் வசன வரிகளில் டைம்மிங் வசனங்களும், அரசியல் நையாண்டிகளும் படத்திற்கு பெரிய பலம். பீம்ஸின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். குணாவின் ஒளிப்பதிவில் குறை ஏதுமில்லை!

மொத்தத்தில் ‘விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்’ திருப்திபடுத்தினாள்.- Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!