வீட்ல விசேஷம் திரைவிமர்சனம்

ஆர். ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் கூட்டணியில் மூக்குத்தி அம்மன் வெற்றியை தொடர்ந்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘வீட்ல விசேஷம்’. ஹிந்தியில் வெளிவந்த பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘வீட்ல விசேஷம்’.

போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ஊர்வசி, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்தததா வீட்ல விசேஷம். வாங்க பார்க்கலாம்.

கதைக்களம் 
பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆர்.ஜே. பாலாஜி { இளங்கோ }, அம்மா ஊர்வசி, அப்பா சத்யராஜ், தம்பி, பாட்டி என அனைவரின் மீதும் அளவுகடந்த பாசத்தை கொண்டுள்ளார். குடும்பத்தை போலவே தனது காதலி அபர்ணாவின் மீதும் காதலை கொண்டுள்ளார். சந்தோஷமாக சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கையில் தீடீரென தனது அம்மா கர்ப்பமாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்கிறார் பாலாஜி.

50 வயதில் தனது அம்மா கர்ப்பமாக இருப்பதை அறியும் பாலாஜி சற்று அதிர்ச்சியடைகிறார். பல இடங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகிறார். இதனால், அம்மா அப்பாவிடம் கடுமையாகவும் நடந்துகொள்கிறார். இந்த விஷயத்தினால், குடும்பத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுகிறது.

மகன்கள் மட்டுமட்டுமின்றி சமூகத்திலும் ஊர்வஷியை சற்று ஒதுக்கி வைத்த பார்த்து வருகிறார்கள். எங்கு சென்றாலும், உறவினர்கள் ஊர்வஷியை தவறாக பேசுகிறார்கள். இந்த அனைத்து கஷ்டங்களையும் தாங்கி, ஊர்வசி தனது குழந்தையை பெற்றெடுத்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.. 

படத்தை பற்றிய அலசல்  
வழக்கம் போல் தனது நகைச்சுவை கலந்த எதார்த்தமான நடிப்பை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் காட்டியுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. அம்மாவாக நடித்துள்ள நடிகை ஊர்வசி நடிப்பில் பட்டையை கிளப்பியுள்ளார். நகைச்சுவை, செண்டிமெண்ட், பாசம், கணவரிடம் கண்டிப்பு என ஸ்கோர் செய்கிறார். அதற்கு சற்றும் குறையாத வகையில் நடித்துள்ளார் சத்யராஜ். மனைவி மற்றும் அம்மா இருவரிடமும் சொல்பேச்சு கேட்டு நடந்துகொள்ளும் ஒரு குடும்ப தலைவராக நடிப்பில் பின்னியுள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி பாட்டியாக நடித்துள்ள மறைந்த நடிகை கே.பி.ஏ.சி. லலிதா கதாபாத்திரத்தில் சிறந்து விளங்குகிறார். கதாநாயகியாக நடித்துள்ள அபர்ணா பாலமுரளி, அழகாக வந்து, எதார்த்தமான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளார். பாலாஜியின் தம்பியாக நடித்துள்ளவர் தனக்கு கொடுத்ததை கச்சிதமாக செய்துள்ளார். மற்றபடி அனைவரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு தேவையானதை செய்துள்ளனர். ஆர்.ஜெ. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணனின் இயக்கம், திரைக்கதை ஓகே.

ஆனால், படத்தில் சில இடங்களில் நகைச்சுவை ஒர்கவுட் ஆகவில்லை. ஹிந்தியில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படம் என்றாலும், நம் தமிழ் திரையுலகிற்கு ஏற்ப சில விஷயங்களை அழகாக மாற்றியுள்ளார்கள். ஒரு பெண் நினைத்தால், எப்போது வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதை அழகாக காட்டியுள்ளார்கள். அதற்கு பாராட்டு. கிரிஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம். கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு மற்றும் செல்வாவின் எடிட்டிங் சூப்பர்.  

க்ளாப்ஸ்
ஊர்வசி, சத்யராஜ், ஆர்.ஜே. பாலாஜி நடிப்பு
பாடல்கள், பின்னணி இசை
செண்டிமெண்ட்

பல்ப்ஸ்
சில இடங்களில் நகைச்சுவை சொதப்பல்

மொத்தத்தில் குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய படமாக அமைந்துள்ளது வீட்ல விசேஷம்.
2.75 / 5 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!