அப்போதெல்லாம் எங்களுக்கு ராயல்டி அல்ல நாயர் டீ கூட கிடைக்காது – வைரமுத்து பேச்சு

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்து, சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வேதனையுடன் பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்கள் எழுதி அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்தார். இவர் இதுவரை 7500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார்.


இந்நிலையில் சென்னையில் நடந்த இசை மற்றும் பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பான கருத்தரங்கில் அவர் வேதனையாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது:


கலைஞர்கள் பாவம், கலைஞர்கள் கற்பனாவாதிகள், கலைஞர்கள் சட்டம் அறியாதவர்கள், கலைஞர்கள் உரிமை தெரியாதவர்கள். பூமியில் நின்றுகொண்டு நட்சத்திரங்களில் தேன் குடிக்க ஆசைப்படுபவர்கள். தாய்ப்பாலுக்கும் நிலாப்பாலுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள். அவர்கள் சட்டம் பற்றி எதுவும் அறியார். என்னுடைய மூத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒருமுறை என்னிடம் சொன்னார். எனக்கு ஸ்வரங்கள் மொத்தம் ஏழு சரிகமபதநிச அதற்கு பிறகு எனக்கு நம்பர் தெரியாது. அந்த ஸ்வரங்கள் வரைக்கும் தான் எனக்கு தெரியும். இப்பொழுது பல விஷயங்களை சொல்கின்றனர். 

ஐபிஆர்எஸ் வருவதற்கு முன்னால் எங்களுக்கு ராயல்டி அல்ல நாயர் டீ கூட கிடைக்காது. அதற்கு பிறகு தான் ராயல்டி என்ற பேச்சே எங்களுக்கு வந்தது. மேல்நாடுகளில் ஒருவன் 100 பாட்டுக்கு மேல் எழுதிவிட்டால் அவன் அதற்கு பிறகு வாழ்க்கையில் அவன் சுவாசிப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய தேவையில்லை. அந்த 100 பாட்டுக்கு வரக்கூடிய ராயல்டியில் ஒரு தீவே வாங்கிவிடலாம். அந்த பணம் செலவழிந்தால் அவன் மீண்டும் கரைக்கு வந்து ஒரு 5 பாட்டு எழுதிவிட்டு திரும்ப தீவுக்கு போய்விடலாம். நான் 7500 பாட்டு எழுதியிருக்கிறேன் இவர்கள் அனுப்பக்கூடிய சில லட்சத்திற்காக காத்திருக்கிறேன். இவ்வாறு வைரமுத்து ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!