கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம்.. பா.இரஞ்சித் பேச்சு

தமிழ் சினிமாவில் அரசியல் பேசும் படங்களை இயக்கிவுள்ள பா.இரஞ்சித் கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி பேசியுள்ளார்.

நீலம் புரடொக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. கலையரசன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அஞ்சலி பாட்டீல் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஜி.ராஜேஷ் அமைத்திருக்கிறார். பிரதீப் குமார் மற்றும் மார்டின் விசர் இசையமைத்திருக்கிறார்கள்.


உளவியல், ஆள்மன கற்பனைகள் மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டு, மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இது இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாகவும், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாகவும் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கி உள்ளனர்.

இந்நிலையில் குதிரைவால் பற்றி இயக்குனர் பா.இரஞ்சித் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய ஆரம்பமாக இருக்கும். புற உலகில் இருந்து விலகி அக உலகிற்குள் இருக்கும் ஒரு கலையை பற்றி குதிரைவால் படம் பேசி இருக்கிறது. கனவு, கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி குதிரைவால் காட்சிப்படுத்தி உள்ளது. வழக்கமான ஹீரோ வில்லன் கதையாக இல்லாமல், பார்ப்பவர்கள் பர்சனலாக கனெக்ட் செய்து
கொள்ள கூடிய அளவில் படம் இருக்கும். திரையரங்குகளில் குதிரைவால் படம் தரும் புதிய அனுபவம் பேசப்படும்” என்று பேசியுள்ளார். 

இப்படம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று இறுதியாக மக்கள் பார்வைக்காக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!