யாரோ – விமர்சனம்

நடிகர் வெங்கட் ரெட்டி
நடிகை உபசனா
இயக்குனர் சந்தீப் சாய்
இசை கோஸ் ப்ராங்க்ளின்
ஓளிப்பதிவு கே.பி.பிரபு

தனியார் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார் நாயகன் வெங்கட். இவர் கடலோரத்தில் ஒரு மிகப்பெரிய பங்களாவில் தனியாக வசித்து வருகிறார். இவர் வசிக்கும் பங்களாவில் தன்னுடன் யாரோ ஒருவர் இருப்பதாக உணர்கிறார் வெங்கட். இதனால், தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பார்க்க சொல்கிறார். அவர்களும் பங்களாவை பார்த்து இங்கு வேறு யாரும் இல்லை எனக் கூறி சென்று விடுகின்றனர்.

ஒருநாள், தனது வீட்டிற்குள் இருந்து கேமரா ஒன்றை எடுக்கிறார். அந்த வீடியோ கேமராவில், யாரோ ஒருவர் பெரியவர் ஒருவரை கொலை செய்வதை கண்டு வெங்கட் அதிர்ச்சியடைகிறார். கொலை செய்யும் நபரின் முகம் அதில் தெரியாமல் இருக்கிறது.


இறுதியில், அந்த வீடியோவில் கொலை செய்த நபர் யார்? கொலை செய்யப்பட்ட நபர் யார்? வெங்கட்டை சுற்றி வரும் மர்ம நபர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெங்கட் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம். ஒட்டுமொத்த கதையிலும் இவர் மட்டுமே பயணிக்கும் படியாக கதை நகர்கிறது. தயாரிப்பாளரும் இவராகவே இருப்பதால், படம் முழுவதும் இவரே அதிக நேரம் பயணிக்கிறார். கதாபாத்திரத்திற்கு தேவையான மெனக்கெடலை செய்திருந்தால், கூடுதலாக ரசித்திருக்கலாம். நாயகியாக நடித்திருக்கும் உபசனா கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

படத்தின் முதல் பாதி திரைக்கதை எங்கு செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம் பாதியை ஓரளவிற்கு ரசிக்கும் படி இயக்கி இருக்கிறார் இயக்குனர் சந்தீப் சாய். தேவை இல்லாமல் இடம்பெற்றிருக்கும் பல காட்சிகள் படத்திற்கு பலவீனம். இறுதியாக யார் அந்த கொலையாளி என்ற கேள்விக்கு பதில் சொல்லும் விதம் சிறப்பாக அமைந்திருக்கிறது.


திகில் படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை கே.பி.பிரபு கொடுத்திருக்கிறார். அதேபோல், கோஸ் ப்ராங்க்ளின் இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. 


மொத்தத்தில் ‘யாரோ’ மனதில் நிற்கவில்லை.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!