ஜென்டில்மேன் 2 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

இயக்குனர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்க இருக்கிறார் தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன்.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி தயாரிப்பாளராக பல பிரமாண்ட படங்களை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன்.  நடிகர் சரத்குமார், இயக்குனர் ஷங்கர் போன்ற பலரை திரையுலகிற்கு தந்தவர். இவர் ஜென்டில்மேன், சூர்யன், காதலன், காதல் தேசம், ரட்சகன் போன்ற பல படங்களை தமிழில் தயாரித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார். இவர் ஜென்டில்மேன்2 படத்தை அடுத்ததாக தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவருடைய படங்களை விளம்பரப்படுத்துவதில் தனி கவனம் செலுத்தும் இவரின் அடுத்த படைப்பான ஜென்டில்மேன்2 படத்திற்கு  இசை அமைப்பாளர் யார் என்பதை, ரசிகர்களுக்கு ஒரு போட்டியாக நேற்று அறிவித்திருந்தார். இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படும் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

இந்நிலையில் படத்தின் முதல் அறிவிப்பாக படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். பாகுபலி போன்ற பிரமாண்ட படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!