மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் – விமர்சனம்

நடிகர் மோகன்லால்
நடிகை கீர்த்தி சுரேஷ்
இயக்குனர் பிரியதர்ஷன்
இசை ராகுல் ராஜ்
ஓளிப்பதிவு திரு
16 ஆம் நூற்றாண்டில் கேரளாவில் சாமுத்ரி ராஜ்ஜியத்தில் கடற்படை தளபதியாக விளங்கிய குஞ்சாலி மரைக்காயரின் கதையை மையமாக வைத்து ‘மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம்’ என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறுவயது முதலே அம்மாவின் செல்லப்பிள்ளையாக வளர்கிறார் முஹம்மது அலி என்கிற குஞ்சாலி மரைக்காயர் (மோகன்லால்). இவருக்கு திருமணம் நடப்பதற்கு முதல் நாள், மணபெண்ணான கல்யாணி பிரியதர்ஷன் உட்பட ஒட்டுமொத்த மரைக்காயர் குடும்பத்தையும் போர்ச்சுகீசிய படைகளின் உதவியுடன் எதிரிகள் கொல்கின்றனர்.

இந்த தாக்குதலில் தனது சித்தப்பாவுடன் தப்பித்து ஒரு நாடோடியைப் போல வாழ்கிறார் மோகன்லால். ஆட்சியாளர்களிடமிருந்து உணவு தானியங்களை கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு கொடுக்கிறார். போர்ச்சுகீசியப் படைகளை சமாளிக்க முடியாமல் திணறும் சாமுத்ரி அரசர் மோகன்லாலின் உதவியை நாடுகிறார்.

இறுதியில் மோகன்லால், சாமுத்ரி அரசருடன் இணைந்து போர்ச்சுகீசிய படைகளை வீழ்த்தினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

குஞ்சாலி மரைக்காயராக மோகன்லால். கதைக்களத்துக்கு ஏற்ப ஒட்டுமொத்த படத்தையும் ஒற்றை ஆளாக தாங்கிப் பிடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் வேற யாரையும் நினைத்துப் பார்க்க முடியாதபடி சின்ன சின்ன அசைவுகளில் கூட அசத்துகிறார். நெடுமுடிவேணு, சுனில் ஷெட்டி, அர்ஜுன், அசோக் செல்வன், பிரபு, கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், ஹரீஷ் பெரடி என படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள். இவர்கள் அனைத்தும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

இளவயது மரைக்காயராக வரும் ப்ரணவ் மோகன்லாலுக்கு இது பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. குறைந்த நேரமே படத்தில் வந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார்.

படத்தில் இத்தனை நடிகர்கள் இருந்தும் அவர்கள் யாருக்குமே பாத்திரப் படைப்பு சரியாக அமையாமல் போனது சோகம். கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், பிரபு, ஹரீஷ் பெரடி, சுனில் ஷெட்டி என அனைவரது கதாபாத்திரங்களும் சரியாக பயன்படுத்தபடவில்லை.

1996ஆம் ஆண்டு மோகன்லால் – பிரியர்தர்ஷன் கூட்டணியில் வெளியான ‘சிறைச்சாலை’ படத்துக்குப் பிறகு திட்டமிடப்பட்ட இப்படம் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி இருக்கிறது. திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது படத்திற்கு பலவீனம். படத்திற்கு பெரிய பலம் கிராபிக்ஸ் காட்சிகள். இதற்கு துணையாக நின்ற கலை இயக்குநர் சாபு சிரில் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு ஆகியோருக்கு பெரிய பாராட்டுகள். அதுபோல், படத்தில் போர்க்களக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்க வைக்கின்றன.

படத்துக்கு ராகுல் ராஜ், அன்கித் சுரி, லயல் எவான்ஸ் ரோடர், ரோனி ரஃபேல் ஆகியோர் இசையமைத்து இருக்கிறார்கள். ஒரு வரலாற்றுப் படத்துக்கு எது தேவையோ அதைக் கொடுத்து படத்தை தாங்கிப் பிடிக்கின்றனர்.

மொத்தத்தில் ‘மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’ ரசிக்கலாம்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!