சம்பள பாக்கி காரணமாக மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் மீது, ​தமன்னா எடுக்கவுள்ள நடவடிக்கை !

உலக அளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சி “மாஸ்டர் செஃப்”.இந்த நிகழ்ச்சி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகிவருகிறது.

தமிழில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவரும் நிலையில் தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்கினார். ஆனால் திடீரென சில நாள்களுக்கு முன்பு தமன்னா மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், நிகழ்ச்சியிலிருந்து தமன்னா வெளியேறியதற்கான காரணம் குறித்த விளக்கமும், மாஸ்டர் செஃப் குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அவரின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மாஸ்டர் செஃப்’ தெலுங்கு நிகழ்ச்சியின் சம்பள பாக்கி இன்னும் கொடுக்கப்படவில்லை என்பதாலும், தயாரிப்பு தரப்பான இன்னவேடிவ் ஃபிலிம் அகாடமியின் தொழில் முறையற்ற அணுகுமுறையாலும் தமன்னா சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தயாரிப்பு தரப்பு தொடர்ந்து சம்பளம் தராமல், தொழில் ரீதியாக ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றாலும் தனது மற்ற வேலைகளை ரத்து செய்துவிட்டு இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியை முடித்துத் தர வேண்டும் என்பதில் தமன்னா தீர்மானமாகவே இருந்தார்.

ஆனால் திடீரென்று தயாரிப்பு தரப்பு அவருடனான தொடர்பை நிறுத்திவிட்டது என்பதால் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தமன்னா தள்ளப்பட்டுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!