அகடு – விமர்சனம்

நடிகர் ஜான் விஜய்
நடிகை அஞ்சலி நாயர்
இயக்குனர் சுரேஷ் குமார்
இசை ஜான் சிவநேசன்
ஓளிப்பதிவு சாம்ராட்

சிறுவயதில் இருந்தே ஒன்றாக படித்து வளர்ந்த 4 இளைஞர்கள் கொடைக்கானலுக்கு ‘ஜாலி டூர்’ செல்கிறார்கள். அங்கு ஒரு டாக்டர், அவரது மனைவி, 12 வயது மகள் ஆகியோரும் வருகிறார்கள். 4 நண்பர்களும், டாக்டர் குடும்பமும் நண்பர்களாகி விடுகிறார்கள்.

இந்த நிலையில், டாக்டரின் மகளும், நண்பர்களில் ஒருவரும் காணாமல் போகிறார்கள். நண்பர்கள் மீது டாக்டர் சந்தேகப்பட்டு, அவர்களின் சட்டையை பிடிக்கிறார். நண்பர்கள் மூன்று பேரையும் போலீஸ் கைது செய்கிறது. இந்த சூழலில், டாக்டரின் மகளுடன் காணாமல் போன இளைஞர் காட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.

போலீஸ் அதிகாரி ஜான் விஜய்க்கு ‘செக் போஸ்ட்’டில் இருக்கும் வன பாதுகாவலர் மீதும், காட்டுக்குள் கஞ்சா கடத்தும் 3 பேர் மீதும் சந்தேகம் ஏற்படுகிறது. விசாரணையில் அவர்கள் நிரபராதிகள் என்பது தெரிய வருகிறது. உண்மையான கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய் வழக்கமான அலட்டல்களுக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டு, யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக வருகிறார். இவர் விசாரணை செய்யும் ‘ஸ்டைல்’ புதுசு.

டாக்டராக வரும் விஜய் ஆனந்த், டாக்டரின் மனைவியாக அஞ்சலி நாயர் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கிளைமாக்ஸ்சில், அஞ்சலியா இவர்? என்று ஆச்சரியப்படுத்துகிறார். நண்பர்களாக வரும் சித்தார்த், ஶ்ரீராம் கார்த்திக் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

போதையால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் குமார். கதை முழுவதும் காட்டுக்குள் முடங்கிப்போனது, படத்தின் ஒரே பலவீனம். குறிப்பாக, ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன.

கடத்தல்காரன் மற்றும் கொலையாளி யார்? என்பதை மூடுமந்திரமாக வைத்து, கடைசி வரை காப்பாற்றி இருப்பதற்காக இயக்குனர் சுரேஷ்குமாருடன் கைகுலுக்கலாம். படத்தின் தலைப்புக்கு என்ன அர்த்தம்? என்று புரியாமல் தியேட்டருக்குள் சென்றால்… ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.
சாம்ராட் ஒளிப்பதிவில், மலைகள் சூழ்ந்த காடுகள் கண்களுக்குள் நிற்கின்றன. இசையமைப்பாளர் ஜான் சிவநேசனின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கனம் சேர்த்து இருக்கிறது.

மொத்தத்தில் ‘அகடு’ ஆச்சரியம்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!