விண்வெளியில் படப்பிடிப்பு நடத்திய படக்குழுவினர்

சேலஞ் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை ரஷ்ய படக்குழுவினர் விண்வெளியில் நடத்தி இருக்கிறார்கள்.

ஹாலிவுட்டில் விண்வெளியை மையமாக வைத்து கிராவிட்டி, இன்டர்ஸ்டெல்லர் போன்ற பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. முதன் முறையாக விண்வெளிக்கே சென்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள் ரஷ்ய படக்குழுவினர். இந்தப் படத்தை கிலிம் ஷிபென்கோ இயக்குகிறார்.

கதைப்படி ஆய்வுக்காக விண்வெளிக்குச் செல்லும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவருக்கு இதயப் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. அவரை காப்பாற்ற பூமியிலிருந்து ஒரு மருத்துவர் செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் தான் படத்தின் கதை.

சேலஞ் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு தீவிர பயிற்சியும், பரிசோதனையும் படக்குழுவினருக்கு நடத்தப்பட்டிருக்கிறது. சோயஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்று அங்கு மூன்று மாதங்களுக்கு மேல் தங்கி படம் எடுத்து வருகிறார்கள்.

இது பற்றி இயக்குனர் கூறும்போது, “விண்வெளி நம் வாழ்க்கையை மாற்றும். கடந்த மூன்று மாதங்களாக அற்புதமான உலகில் இருக்கிறோம். பூமியில் படம் எடுப்பதை விடக் குறைவான நேரமே இருந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!