அபராதம் விதித்த ரூ.5 லட்சத்தை கல்வி உதவிக்கு வழங்கிய விஷால்

நடிகர் விஷால், தனது தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கி வருகிறார்.

நடிகர் விஷாலுக்கு எதிரான கடன் தொகை வழக்கில் லைகா பட நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.5 லட்சம் வழக்கு செலவாக அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

இந்த ரூ.5 லட்சம் அபராத தொகையை பெற்று மாணவ மாணவிகள் கல்வி செலவுக்கு வழங்கப் போவதாக நடிகர் விஷால் அறிவித்து உள்ளார். அவர் கூறும்போது, “தேவி அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கி வருகிறேன். தற்போது கோர்ட்டு அபராதம் விதித்துள்ள ரூ.5 லட்சம் தொகை தேவி அறக்கட்டளை மூலம் மாணவ மாணவியரின் படிப்பு செலவுக்கு முழுமையாக செலவு செய்யப்படும்” என்றார்.

விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஆர்யா வில்லனாக வருகிறார். அடுத்து து.ப.சரவணன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். துப்பறிவாளன் 2-ம் பாகத்தை இயக்கி நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!