சிவகார்த்திகேயனின் ‘டான்’ படக்குழுவுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பாலம் ஆற்றங்கரை பகுதியில் நேற்று மாலை நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுஇடங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பாலம் ஆற்றங்கரை பகுதியில் நேற்று மாலை நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு மேம்பாலம் பகுதியில் நடைபெற்றதால் நடிகர் சிவகார்த்திகேயனை காண்பதற்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர்.

பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முககவசம் அணியாமல் கும்பலாக படப்பிடிப்பை காண நின்று கொண்டிருந்தனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும், படப்பிடிப்பு நடத்துபவர்கள் அவர்களின் வாகனங்களை மெயின் ரோடு பகுதியில் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து போலீசாரும் வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்து நின்றதால், படப்பிடிப்பை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுமதியின்றி அந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டான் படக்குழுவினருக்கு வருவாய்த்துறையினர் ரூ.19,400 அபராதம் விதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!