நல்ல பாடல் என்றாலே அவர்தான் என்று நினைத்த காலம் அது… கண்ணதாசன் நினைவுகள்

வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருக்கிறார்.

கலை உலகின் பொக்கிஷமாக திகழ்ந்த கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. காலத்திற்கும் அழியாத, மறக்க முடியாத பாடல்களை கொடுத்துச் சென்றவர் கவிஞர் கண்ணதாசன். இந்து மதத்தில் பிறந்தாலும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

பாரதியாரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட கண்ணதாசன், 4000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5000-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும் எழுதியுள்ளார். நவீனங்கள், கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்துள்ளார். கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி விருதும் பெற்றுள்ளார்.

நல்ல பாடல் என்றாலே அது கண்ணதாசன்தான் எழுதியிருப்பார் என்று நினைக்கும் அளவுக்கு மக்கள் மனதில் அவரது பாடல்கள் ஆழமாக பதிந்திருந்தன. கவிஞர் கண்ணதாசனும், கவிஞர் வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா?’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.

இதுபற்றி சில நிகழ்வுகளை கவிஞர் வாலி பதிவு செய்திருக்கிறார். நான் எழுதிய ‘காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்!’ பாடலை கண்ணதாசன் எழுதியதாக, அவ்வை நடராஜன் ஒரு விழாவில் பேசினார், என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டே இவ்வாறு சொன்னபோது மக்கள் ஆரவாரம் செய்து ஆமோதித்தனர் என, வாலி குறிப்பிட்டார்.

இதேபோல், கண் போன போக்கிலே கால் போகலாமா?… என்ற பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியதாக நடிகை மனோரமா ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தார். இப்ப வர்ற சினிமாவிலே, இது மாதிரி யாரு கருத்தோட பாட்டு எழுதறாங்க?” என்று ஒரு வினாவையும் எழுப்பியிருந்தார், மனோரமா.

‘நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ’ என்ற பாடலை கண்ணதாசன் எழுதியதாக பிரபல பட அதிபர் `ஜீவி’ அவர்கள் ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தார். இது போல கற்பனை வளத்தோடு எழுத இப்போது யார் இருக்கிறார்கள்? என்றும் அவர் கூறியிருந்தார்.

இவ்வாறு தனது பாடலை கண்ணதாசன் எழுதியதாக குறிப்பட்டதால் விசனப்படவில்லை என கூறிய வாலி, நல்ல பாடல் என்றாலே, அதைக் கண்ணதாசன் எழுதியிருக்க வேண்டும் என்று மேற்சொன்ன மூவரும் நினைப்பதில் தப்பில்லை என்றார். இருப்பினும், எதை எவர் எழுதினார் என்று தெள்ளத்தெளிய அறிந்து வைத்துக்கொண்டு பேசுதல்தான் நயத்தகு நாகரீகம் என்று எடுத்துரைத்தார்.

`வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை’ என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருக்கிறார்.

தமிழ்நாடு அரசு, கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மணிமண்டபம் அமைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!