ராட்சசன் இன்பராஜை விட மோசமானவர்கள் நிறைய பேர் உள்ளனர் – இயக்குனர் ராம்குமார்

ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று இயக்குனர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வை விஷ்ணு விஷால் நடிப்பில், வெளியான ராட்சசன் திரைப்படத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

வகுப்பறையிலேயே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் இன்பராஜ் எனும் கதாபாத்திரம் அப்படத்தில் இடம்பெற்றிருக்கும், அதனை தற்போது ராஜகோபாலன் விவகாரத்தோடு ஒப்பிட்டு அனைவராலும் பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது: “ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யப்படவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்” என ராம்குமார் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!