இந்திய நடிகர் இர்பான் கானுக்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி

புற்றுநோயால் கடந்தாண்டு உயிரிழந்த இந்திய நடிகர் இர்பான் கானுக்கு 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் எனும் அகாடமி விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும் ஆஸ்கர் விருது, இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது.

அந்தவகையில் 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விழா நடந்தது.

இந்த விருது வழங்கும் விழாவில், கடந்தாண்டு உயிரிழந்த முக்கியமான நடிகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் கடந்தாண்டு புற்றுநோயால் உயிரிழந்த இந்திய நடிகர் இர்பான் கானுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நடிகர் இர்பான் கான், இந்திய படங்களில் மட்டுமல்லாது லைப் ஆஃப் பை, ஸ்பைடர்மேன், ஜுராசிக் வேர்ல்டு போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்திய ஆடை வடிவமைப்பாளரான பாணு அதயாவிற்கும் ஆஸ்கர் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!