கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலி… பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ரத்து

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 70 சதவீதம் முடிந்துள்ளது.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக அமிதாப்பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். இதன் படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்து காடுகளில் நடத்தினர். பின்னர் கொரோனா பரவலால் படப்பிடிப்பு பல மாதங்களாக முடங்கியது. ஊரடங்கு தளர்வில் மீண்டும் ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தினர். அடுத்து அம்பாசமுத்திரம் பகுதியில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகளை படமாக்க திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்தனர்.

ஆனால் கொரோனா இரண்டாவது அலை பரவி நடிகர், நடிகைகள் நோய் தொற்றில் சிக்குவதாலும் மும்பையில் நடந்த அக்‌ஷய்குமாரின் இந்தி படப்பிடிப்பில் பங்கேற்ற 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெறுவதாக இருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை படக்குழுவினர் ரத்து செய்து விட்டனர். இதுவரை பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!