அனு அன்ட் அர்ஜுன் – விமர்சனம்

நடிகர் விஷ்ணு மஞ்சு
நடிகை காஜல் அகர்வால்
இயக்குனர் ஜெப்ரி ஜீ சின்
இசை சாம் சி எஸ்
ஓளிப்பதிவு ஷெல்டன் சாவ், புரூஸ்
அக்கா, தம்பியான காஜல் அகர்வாலும், விஷ்ணு மஞ்சுவும் இரட்டையர்கள். நாயகன் விஷ்ணு மஞ்சு கால் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். அப்போது வாடிக்கையாளர்களின் தகவல்களை சட்ட விரோதமாக எடுத்து அதை வெளியே விற்று குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து வருகிறார். விஷ்ணு மஞ்சுவின் தில்லுமுல்லு வேலைகளை கண்டுபிடிக்கும் கால் சென்டர் முதலாளியான நவ்தீப், அவருடனே கூட்டு சேர்ந்து பெரிய அளவில் கொள்ளையடிக்க திட்டமிடுகின்றார்.

இதற்காக தனியே ஒரு அலுவலகத்தை தொடங்கி, வெளிநாடுகளில் இருக்கும் பணக்காரர்களிடம் கொள்ளையடிக்கின்றனர். இதற்கு காஜல் அகர்வாலும் உறுதுணையாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்கள் அனைவரும் ஒரு பிரச்சனையில் சிக்குகிறார்கள். இதையடுத்து அவர்களுக்கு என்ன ஆனது? அந்த பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விஷ்ணு மஞ்சு, மிடுக்கான தோற்றத்துடன் திறம்பட நடித்திருக்கிறார். கொள்ளையடிக்க இவர் போடும் யுக்திகள், சிக்கிய பிறகு அதிலிருந்து தப்பிக்க முயல்வது என ரசிக்கும்படி நடித்துள்ளார். இவரின் அக்காவாக வரும் காஜல் அகர்வால், புத்திசாலி பெண்ணாக நடித்துள்ளார். அழகு பதுமையுடன் வந்து கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

கால் சென்டர் முதலாளியாக வரும் நவ்திப்பின் நடிப்பும் அட்டகாசம். போலீஸ் அதிகாரியாக வரும் சுனில் ஷெட்டி, வில்லனாக வரும் நவீன் சந்திரா ஆகியோர் சரியான தேர்வு, நேர்த்தியாக நடித்துள்ளனர்.

இயக்குனர் ஜெப்ரி, ஐடி துறையில் நடந்த மிகப்பெரிய மோசடியை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார். கதாபாத்திரங்கள் தேர்வு கச்சிதமாக உள்ளது படத்திற்கு பலம். விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். டப்பிங் படம் என்பதால் பாடல்கள் சுமார் தான். ஆனால் பின்னணி இசை மூலம் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளார். புரூஸ் மற்றும் ஷெல்டனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.

மொத்தத்தில் ‘அனு அன்ட் அர்ஜுன்’ விறுவிறுப்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!