கணேசாபுரம் – விமர்சனம்

நடிகர் சின்னா
நடிகை ரிஷா ஹரிதாஸ்
இயக்குனர் வீரங்கன்
இசை ராஜா சாய்
ஓளிப்பதிவு வாசு
கணேசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னா, ராஜ் பிரியன் மற்றும் காசிமாயன் மூவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் திருடுவதை தொழிலாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் போல் பல ஊர்களை சேர்ந்த திருட்டு கும்பல்களை தனது கைக்குள் வைத்து இருக்கிறார் ஜமீந்தார் பசுபதி ராஜ்.

ஒருநாள் பஞ்சாயத்தின் போது, ஊர் தலைவர் கயல் பெரேராவை சின்னா அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் பெரேராவின் மகன் ராஜசிம்மன், சின்னா மற்றும் நண்பர்கள் அனைவரையும் கொல்ல முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் நாயகி ரிஷாவை சின்னா காதலிக்க ஆரம்பிப்பதால், நண்பர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. நண்பர்களின் சண்டையால் திருட்டு தொழிலுக்கும் செல்லாமல் இருக்கிறார்கள்.
விமர்சனம்

இறுதியில் ராஜசிம்மன், சின்னா மற்றும் நண்பர்களை கொலை செய்தாரா? பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சின்னா, அம்மாசி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், காலரை தூக்கிவிடுவது, லுங்கியை தூக்கி கட்டுவது, பீடி பிடிப்பது என்று அடிக்கடி செய்வதால் எரிச்சலடைய வைக்கிறது. டிக் டாக் மூலமாக பிரபலமான ராஜ் பிரியன், சின்னாவின் நண்பராக நடித்திருக்கிறார். முதல் படம் என்று தெரியாதளவிற்கு அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றொரு நண்பராக வரும் காசிமாயனின் நடிப்பு ஓகே தான். ஆனால், இவருக்கான காதல் காட்சிகள், பாடல் என இரண்டுமே படத்தோடு ஒட்டவில்லை.

கயல் பெரேரா, ராஜ சிம்மன், பசுபதி ராஜ், சரவண சக்தி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நாயகி ரிஷா புதுமுகம் என்பதால் மன்னித்து விடலாம்.

நட்பு, காதல், திருட்டு என கிராமத்து பின்னணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வீரங்கன். படத்தின் காட்சிகளை பார்க்கும் போது கிராமத்து பின்னணியில் வெளியான பல படங்களை ஞாபகப்படுத்துகிறது. யூகிக்கும்படியான காட்சிகள், தந்துவ வசனங்கள், இரண்டாம் பாதியின் நீளம் ஆகியவை படத்திற்கு பலவீனம்.

வாசுவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ராஜா சாயின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் திரைக்கதைக்கு கைக்கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கணேசாபுரம்’ கவரவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!