இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் – உதவியாளர் வேண்டுகோள்

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் ‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’, ‘லாபம்’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

தமிழ் சினிமாவில் புரட்சிகரமான கருத்துகளை உடைய படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். இவருடைய இயக்கத்தில் ‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இடதுசாரி ஆதரவாளரான இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர் இயக்கிய முதல் படமான ‘இயற்கை’ தேசிய விருதை வென்றது.

இவர் இயக்கத்தில் அடுத்து விஜய் சேதுபதி, சுருதிஹாசன் நடிப்பில் ‘லாபம்’ படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தீவிரமாகப் பணிபுரிந்து வந்தார்.

நேற்று மதியம் எடிட்டிங் பணிகளில் இருந்து வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். மீண்டும் எடிட்டிங் பணிக்கு நீண்ட நேரமாகத் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

அவரை உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு அவரிடம் உதவியாளராக பணியாற்றி வரும் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். இத்தகைய தவறான தகவல் பரப்பப்படுவது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அவர், மருத்துவர்கள் அடுத்த கட்ட சிகிச்சை குறித்து ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் அவர் ஆடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!