சினிமா தொழிலாளர்கள் 100 பேருக்கு ஸ்மார்ட் போன் – அசத்தும் சோனு சூட்

ஆச்சார்யா படக்குழுவில் பணியாற்றிய சினிமா தொழிலாளர்கள் 100 பேருக்கு, நடிகர் சோனு சூட் இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கி உள்ளார்.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை தன்னால் இயன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.

குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி செய்து கொடுத்தது, ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து தந்தது, விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, ஏழை மாணவர்களுக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்தது, ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் அமைத்துக் கொடுத்தது என இவர் செய்த உதவிகள் ஏராளம்.

அவரது மனிதாபிமானமிக்க செயல்களை பாராட்டி தெலங்கானாவில் உள்ள துப்ப தண்டா என்கிற கிராமத்தில் சோனு சூட்டுக்கு கோயில் கட்டியுள்ளனர்.

மொபைல் போன் பெற்ற உற்சாகத்தில் சினிமா தொழிலாளர்கள்

இந்நிலையில் சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து வரும் சோனு சூட், அந்தப் படப்பிடிப்பில் பணியாற்றும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய சினிமா தொழிலாளர்களுக்கு உதவியுள்ளார். அவர்களின் குழந்தைகள் ஆன்லைனில் பள்ளிப் பாடங்களைக் கவனிக்க, ஸ்மார்ட்போன் வசதியின்றித் தவித்தது சோனு சூட்டுக்குத் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து படக்குழுவில் இருந்த பணியாளர்களுக்கு 100 மொபைல் போன்களை தன் சொந்த செலவில் வாங்கித் தந்திருக்கிறார் சோனு சூட். அவரின் இந்தச் செயலால் இன்ப அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!