தப்பா யோசிக்காதீங்க – விமர்சனம்

நடிகர் சுந்தரபாண்டிய ராஜா
நடிகை ஜோதிஷா
இயக்குனர் சுல்தான்
இசை ஸ்டெர்லின் நித்யா
ஓளிப்பதிவு எஸ்.ஆர்.வெற்றி
நாயகன் சுந்தரபாண்டிய ராஜா, செய்யாத தவறுக்காக வேலையை இழக்கிறார். சுமார் ஆறு மாத காலமாக வீட்டிலேயே இருக்கும் சுந்தரபாண்டிய ராஜா, வீட்டில் மதிப்பை இழக்கிறார். இவரது மனைவியான ஜோதிஷா வேலைக்குச் செல்வதால், வீட்டு வேலைகளை சுந்தரபாண்டிய ராஜாவை செய்ய சொல்கிறார்.

குடும்பப் பெண்கள் வீட்டில் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யும் சுந்தரபாண்டிய ராஜாவின் வாழ்க்கை என்ன ஆனது? மீண்டும் வேலைக்குச் சென்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சுந்தரபாண்டிய ராஜா, பெண்கள் வீட்டில் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்து காண்பித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஜோதிஷா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

வேலைக்குச் செல்லும் மனைவி, வீட்டில் இருக்கும் கணவன் இவற்றை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சுல்தான். படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கிறது. மனைவி வேலைக்குச் சென்றவுடன் வீட்டில் இருக்கும் கணவன் துணி துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது அன்றாட நபர்களை சந்திப்பது என்று ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார். ஆனால் சுவாரசியமில்லாமல் திரைக்கதை நகர்வது படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. தேவையில்லாத காட்சிகளால் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

பெண் இசையமைப்பாளர் ஸ்டெர்லின் நித்யா இப்படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். இவரது இசை அதிக கவனம் ஏற்படுத்தவில்லை. எஸ்ஆர் வெற்றியின் ஒளிப்பதிவு தெளிவு இல்லை.

மொத்தத்தில் ‘தப்பா யோசிக்காதீங்க’ தேவையற்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!