சியான்கள் – விமர்சனம்

நடிகர் கரிகாலன்
நடிகை ரிஷா
இயக்குனர் வைகறை பாலன்
இசை முத்தமிழ்
ஓளிப்பதிவு பாபு குமார்
தேனி அருகே பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், துரை சுந்தரம், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி. ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்த இவர்கள் 7 பேரும் அறுபது வயதை தாண்டியும் இளம் வயது நண்பர்களைப் போல் பழகி வருகிறார்கள்.

7 பேருக்கும் தனித்தனி ஆசைகள் இருக்கின்றன. அதில் நளினிகாந்துக்கு விமானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசை. அவருடைய ஆசை என்றாவது ஒருநாள் நிறைவேறும் என்று மற்ற நண்பர்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்.

இந்த நிலையில், மருமகள் கையினால் அடி வாங்கிய அவலம் காரணமாக 7 சியான்களில் ஒருவரான நாராயணசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். சொத்துக்கு ஆசைப்பட்டு மகனே வி‌‌ஷ ஊசி போட ஏற்பாடு செய்ததில், துரை சுந்தரம் என்பவர் இறந்து போகிறார்.

இரண்டு நண்பர்களும் தங்கள் கண் முன்னே கொல்லப்படுவதாலும் தற்கொலைக்கு தூண்டப்படுவதாலும் மற்றவர்கள் எடுக்கும் முடிவு என்ன? இந்த சமூகத்துக்கு முதியவர்களின் அவசியத்தை அவர்கள் உணர்த்தினார்களா என்பதை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறது படம்.

படத்தின் நாயகனான கரிகாலன் டாக்டராக வந்து முதியவர்களுக்கு உதவும் பாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷா ஹரிதாஸ் கிராமத்து அழகியாக அம்சமாக தெரிகிறார். முதியவர்கள் தொடர்பான வறுமை காட்சிகளுக்கு இடையே கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் ஜோடியின் யதார்த்தமான காதல், ரசிக்க வைக்கிறது.

நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகிய 7 முதியவர்களும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். அவர்களில் நளினிகாந்தின் கதையும், நடிப்பும் கலங்க வைக்கிறது. குறிப்பாக கவலைக்கிடமான நிலையில், படுத்த படுக்கையாக கிடக்கும் மனைவிக்கு இவர், ‘தண்டட்டி’ போட்டு விடும் காட்சி, உருக்கம்.

வித்தியாசமான கதை. பேய்களையும், தாதாக்களையும் காட்டி பயமுறுத்திக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில், மாற்றுப்பாதையில் போய் ஏழை முதியவர்களின் கதையை சொல்லி நெகிழவைத்து இருக்கிறார், இயக்குனர் வைகறை பாலன். முதல் பாதி கலகலப்பாகவும் இரண்டாம் உணர்வுபூர்வமாகவும் செல்கிறது. இறுதிக்காட்சி கண்களை குளமாக்குகிறது. திரைக்கதையில் வேகம் கூட்டியிருக்கலாம்.

முத்தமிழ் இசையில் பாடல்களிலும், பின்னணி இசையிலும் கிராமிய மணம் கமழ்கிறது. கிராமத்து யதார்த்தங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாபு குமார்.

மொத்தத்தில் ‘சியான்கள்’ மிளிர்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!