கருப்பங்காட்டு வலசு – விமர்சனம்

நடிகர் எபினேசர் தேவராஜ்
நடிகை அரியா
இயக்குனர் செல்வேந்திரன்
இசை ஆதித்யா-சூர்யா
ஓளிப்பதிவு ஷ்ரவன் சரவணன்
கருப்பங்காட்டு வலசு கிராமம் வளர்ச்சியடையாமல் இருக்கிறது. சுமார் 200, 300 பேர் கொண்ட இந்த கிராமத்தை ஸ்மார்ட் வில்லேஜாக மாற்ற முயற்சி செய்கிறார் ஊர் தலைவரின் மகள் நீலிமா. சிசிடிவி கேமரா, கழிப்பறைகள் ஆகிய வசதிகளை செய்கிறார். இவர் செய்யும் இந்த முயற்சிக்கு ஊர் மக்கள் சிலரின் எதிர்ப்பும் கிளம்புகிறது.

ஊர் மக்களின் மொத்த ஆதரவு கிடைத்தவுடன் திருவிழா நடத்துகிறார்கள். திருவிழா முடிந்த அன்று இரவு நான்கு பேர் மர்மான முறையில் இறக்கிறார்கள். நான்கு பேர் எப்படி இறந்தார்கள்? இதற்கு யார் காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ஊர் தலைவரின் மகளாக வரும் நீலிமா, விவகாரத்து பெற்றதால் தன்னுடைய மனநிலையை சரிசெய்ய கிராமத்தை ஸ்மார்ட் வில்லேஜாக மாற்ற முயற்சி செய்யும் கதாபாத்திரம். அளவான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கிராமத்தில் கூத்துகட்டும் எபினேஷர் தேவராஜ் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவருடன் வரும் அரியா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மாரி செல்லதுறையின் அனுபவ நடிப்பையும், ஜார்ஜ் விஜய் நெல்சன் அலட்டல் இல்லாத நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

கிராமத்தில் நடக்கும் கொலை, அந்த கொலைக்கான காரணம், ஆணவ கொலை என பல விஷயங்களை சொல்லி இருக்கிறார் இயக்குனர் செல்வேந்திரன். ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது வருத்தம். பிற்பாதியில் வரும் நீண்ட காட்சிகள் படத்தின் வேகத்திற்கு தடையாக அமைந்துள்ளது. கிராமத்து கதையை திரில்லர் பாணியில் கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்.

ஆதித்யா-சூர்யாவின் இசை பல இடங்களில் ரசிப்பும், சில இடங்களில் இரைச்சலுமாக உள்ளது. ஷ்ரவன் சரவணனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘கருப்பங்காட்டு வலசு’ சுவாரஸ்யம் குறைவு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!