தட்றோம் தூக்குறோம் – விமர்சனம்

நடிகர் டீஜே
நடிகை ஃபெளசி
இயக்குனர் அருள் எஸ்
இசை பாலமுரளி பாலு
ஓளிப்பதிவு சதீஷ் முருகன்
ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வருகிறார் நாயகன் டிஜே. இவருக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள். இவர்களுடன் சேர்ந்து ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து தப்பிக்கும் டிஜே, காளி வெங்கட் வேலை பார்த்து வரும் ஒயின்ஷாப்பில் இருக்கும் பாட்டிலை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

அதிக பணம் சம்பாதித்து வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார் டிஜே. போதிய பணம் இல்லாததால் அதற்காக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் பாண்டிச்சேரியில் சரக்கு எடுத்து வர நண்பர்கள் மூன்று பேரும் செல்கிறார்கள். அங்கு இவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

இறுதியில் டிஜேக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதிலிருந்து மீண்டாரா? வெளிநாட்டிற்கு சென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அசுரன் படத்தில் தனுசுக்கு மூத்த மகனாக நடித்த டிஜே இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காதல், நடனம், பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார். நண்பர்களாக வருபவர்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நாயகியாக நடித்திருக்கும் பௌசி, டப்ஸ்மாஷ் செய்வது, டிஜேவை காதலிப்பது, சண்டை போடுவது என கதாபாத்திரத்துடன் ஒன்றி பயணித்திருக்கிறார். அரசியல்வாதியாக வரும் சீனு மோகன், அனுபவ நடிப்பால் கவர்ந்திருக்கிறார். காளி வெங்கட், சம்பத் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக அமைந்து இருக்கிறார்கள்.

ஆதரவற்ற இளைஞர்கள், பணமதிப்பிழப்பு ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அருள். கதாபாத்திரங்களிடையே அருமையாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர். பொழுதுபோக்காகவும் விறுவிறுப்பான திரைக்கதையும் படத்திற்கு பிளஸாக அமைந்து இருக்கிறது.

பாலமுரளி பாலு இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக சிம்பு பாடிய பாடல் தாளம் போட வைக்கிறது. சதீஷ் முருகாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘தட்றோம் தூக்றோம்’ சுவாரசியம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!