அந்த மருத்துவம்தான் கொரோனா தொற்றில் இருந்து நான் மீளக் காரணம் – இயக்குனர் வ.கௌதமன்

அந்த மருத்துவம்தான் கொரோனா தொற்றில் இருந்து நான் மீளக் காரணம் என்று இயக்குனர் வ.கௌதமன் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

அதுபோல் நடிகை ஜெனிலியாவும் தனக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறினார். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார். நுரையீரல் பிரச்சனை காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் வ.கௌதமன் கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக மீண்டு விட்டேன் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கொரோன தொற்றுக்காக எழுபது சதவிகிதம் சித்த மருத்துவத்தையும் முப்பது சதவிகித அலோபதி (ஆங்கில) மருத்துவத்தையும் எடுத்துக்கொண்டேன். முழுவதுமாக கொரோனாவிலிருந்து நான் மீள காரணமாக அமைந்தது முதலில் சித்த மருத்துவம்தான். பாசத்திற்குரிய சித்த மருத்துவர்கள் எடுத்துக்கொண்ட சிரத்தைப் போலவே எனது அன்பிற்குரிய அலோபதி மருத்துவ சகோதரர்களும் என் மீது காட்டிய பாசத்தை இந்நேரத்தில் மறக்கவே முடியாது’ என்று கூறினார்.

இயக்குனர் வ.கௌதமன் தமிழில் கனவே கலையாதே, மகிழ்ச்சி போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!