வெப் தொடராக உருவாகும் வீரப்பன் வாழ்க்கை கதை

வீரப்பனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து வெப் தொடர் ஒன்றை உருவாக்க உள்ளதாக இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து, ஏற்கனவே ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் வனயுத்தம் என்ற பெயரிலும், ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரிலும் திரைப்படங்களாக வெளிவந்தன. வனயுத்தம் படத்தில் வீரப்பனாக கிஷோரும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுனும் நடித்திருந்தனர். இந்த படம் தணிக்கை குழுவின் எதிர்ப்பில் சிக்கி பல காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே திரைக்கு வந்தது.

இந்நிலையில் வீரப்பன் வாழ்க்கை கதையை மையமாக வைத்து வெப் தொடர் ஒன்றை எடுக்கப் போவதாக இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, “வனயுத்தம் படத்தில் வீரப்பனின் வாழ்க்கை கதையை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. நிறைய காட்சிகளை தணிக்கை குழுவினர் வெட்டி விட்டனர். இதனால் வெப் தொடராக எடுக்க உள்ளேன்.

வெப் தொடருக்கு தணிக்கை இல்லை என்பதால் வீரப்பனின் முழு வாழ்க்கையையும் இந்த தொடரில் கொண்டு வருவேன். காவல்துறை அதிகாரிகள், வீரப்பனுடன் பழகியவர்கள் போன்றோருடன் பேசி நிறைய தகவல்கள் சேமித்து வைத்துள்ளேன். அவை அனைத்தும் இந்த வெப் தொடரில் இடம்பெறும்.

இந்த வெப் தொடரில் வீரப்பன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடிக்கிறார். மேலும் பலர் நடிக்க உள்ளனர். அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த தொடர் வெளிவரும்” என்றார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!