தனுஷ் இயக்கும் அடுத்த படம் கோலிவுட்டின் பாகுபலியாக இருக்கும் – ஷான் ரோல்டன் சொல்கிறார்

தனுஷ் இயக்கும் அடுத்த படம் கோலிவுட்டின் பாகுபலியாக இருக்கும் என இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

தனுஷ் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டிருக்கிறார். ‘பவர் பாண்டி’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, பிரம்மாண்ட சரித்திர படத்தை தனுசே இயக்கி, நடித்து வந்தார்.

படத்துக்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டிருந்தனர். இந்தப் படத்தில் தனுசுடன் நாகர்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தமாகினர். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த இப்படம், ஷுட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே பைனான்ஸ் பிரச்சனை காரணமாக கிடப்பில் போடப்பட்டது.

இதனிடையே இப்படத்தை தனுஷ் மீண்டும் தொடங்க உள்ளதாகவும், அப்படத்தின் சில பகுதிகளை தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்படம் குறித்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: தனுஷ் இயக்கும் படத்தின் பணிகளில் சில முன்னேற்றங்கள் இருப்பதை தவிர எனக்கு எந்த அப்டேட்டும் தெரியாது. ஆனால் இப்படம் முழுவடிவம் பெற்றால், கண்டிப்பாக இது தமிழ் சினிமாவின் திருப்புமுனை படமாக அமையும். பாகுபலி, தெலுங்கு சினிமாவின் போக்கை மாற்றியதைப் போலவே, இந்த படம் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றும் என்று நான் நம்புகிறேன்.

இந்த படத்தின் மூலம் தனுஷின் அவதாரத்தை ஒரு சிறந்த இயக்குனராக எல்லோரும் பார்ப்பார்கள். தனுஷ் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதையும், அவர் எந்த பாத்திரத்தையும் திறம்பட செய்பவர் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். அதேபோல் அவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட, விரைவில் அனைவரும் அதைப் பார்ப்பீர்கள். அவரது கதையில் ஏராளமான ஆச்சரியங்கள் உள்ளன” என்று ஷான் ரோல்டன் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!