மலேசியா வாசுதேவன் வாழ்க்கை படமாகிறது

நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என்று பன்முக திறன் கொண்ட மலேசியா வாசுதேவனின் வாழ்க்கை படமாகிறது.

நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என்று பன்முக திறன் கொண்டவர் மலேசியா வாசுதேவன். மலேசியாவில் நாடகங்களில் நடித்த அனுபவத்துடன் சென்னை வந்த அவர் 16 வயதினிலே படத்தில் பாடிய ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிகுஞ்சு வந்ததுன்னு பாடல் மூலம் பிரபலமானார். அதன்பிறகு பாடல் வாய்ப்புகள் குவிந்தன.

அவர் பாடிய இந்த மின்மினுக்கி கண்ணில் ஒரு மின்னல் வந்தது, ஆயிரம் மலர்களே மலருங்கள், கோயில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ, மலையோரம் மயிலே, வா வா வசந்தமே, ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு, கோடை கால காற்றே, காதல் வந்திடுச்சு, பொதுவாக என்மனசு தங்கம், அள்ளிதந்த பூமி அன்னையல்லவா, தேவனின் கோயிலிலே, ஒரு கூட்டு கிளியாக, பூங்காற்று திரும்புமா என் பாட்டை விரும்புமா உள்பட பல பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

சுமார் 8 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ளார். 85 படங்களில் நடித்துள்ளார். மலேசியா வாசுதேவன் வாழ்க்கை வரலாற்றை அவரது மகனும் நடிகருமான யுகேந்திரன் சினிமா படமாக எடுக்கபோவதாக அறிவித்து உள்ளார். மலேசியா வாசுதேவன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பாரா என்று தெரியவில்லை. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் இதற்கான வேலைகளை தொடங்க அவர் திட்டமிட்டு உள்ளார். விஜய் சேதுபதி ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!