சொந்த செலவில் தனி விமானம் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் மீட்பு…. அசத்தும் சோனுசூட்

புலம்பெயர் தொழிலாளர்களை மீட்க தனது சொந்த செலவில் தனி விமானம் ஏற்பாடு செய்து நடிகர் சோனுசூட் உதவியுள்ளார்.

தமிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சோனு சூட், பாலிவுட்டிலும் முன்னணி நடிகராக உள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சமூகப் பணிகளில் இறங்கியுள்ள சோனுசூட், தன்னால் இயன்ற உதவிகளை செய்துவருகிறார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பையில் உள்ள தனது 6 மாடி நட்சத்திர ஓட்டலை வழங்கினார். உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கினார். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் செல்ல உதவி செய்து வருகிறார். அவர்களுக்கு உதவுவதற்காக தனி கால்சென்டர் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

அந்தவகையில், கேரள மாநிலம் கொச்சியில் சிக்கி தவித்த ஒடிசாவை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தங்களுக்கு சொந்த ஊர் செல்ல உதவுமாறு கேட்டிருந்தனர். இதை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்திடம் பேசிய சோனு சூட், அவர்களுக்காக தனி விமானம் ஏற்பாடு செய்து 167 தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு செய்தார். அதன் விமான கட்டணத்தையும் தானே ஏற்றுக் கொண்டார். சோனுசூட்டின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.\

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!