அமெரிக்க மாணவர்களின் கல்விக்கு உதவும் பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, கொரோனாவால் தவிக்கும் அமெரிக்க மாணவர்களின் கல்விக்கு உதவ முடிவு செய்துள்ளார்.

கொரோனாவால் உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளன. இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. தினமும் ஆயிரக் கணக்கான உயிர்களை கோவிட்-19 வைரஸ் கொன்று குவித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் தடுமாறுகின்றன. அமெரிக்காவில் கொரோனா பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். இதுவரை அங்கு 22 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் அமெரிக்க பாப் பாடகரை மணந்து அந்த நாட்டில் குடியேறி விட்ட பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொரோனாவால் தவித்து வரும் மாணவர்களின் கல்விக்கு உதவப் போவதாக அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:- ‘இந்த இக்கட்டான நேரத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்வது அவசியமாகும். இளைஞர்களின் வளர்ச்சியும், கல்வியும் எப்போதும் எனது மனதுக்கு நெருக்கமாக உள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்கும் மாணவர்களின் கல்விக்கு உதவி செய்யும் விதமாக ஹெட்போன்கள் வழங்க முடிவு செய்துள்ளேன்’ என்றார்.

இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!