சினிமா தொழிலாளர்களுக்கு உதவ நிதி திரட்டும் சிரஞ்சீவி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ நடிகர் சிரஞ்சீவி நிதி திரட்டி வருகிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருகிறது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். திரையுலகத்தையும் மூடிவிட்டனர். இதனால் துணை நடிகர்-நடிகைகள், திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் அவர்களுக்கு உதவ நடிகர் சங்கமும், பெப்சியும் நிதி திரட்டி வருகிறது. இந்த நிலையில், தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு உதவ நடிகர் சிரஞ்சீவி புதிய அமைப்பை தொடங்கி நிதி திரட்டி வருகிறார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:- “சினிமா துறையில் தினக்கூலிகளாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உதவ தொண்டு அமைப்பை ஆரம்பித்துள்ளோம். இதன்மூலம் ரூ.3.8 கோடி திரட்டி உள்ளோம். நாகார்ஜுனா ரூ.1 கோடியும், ஜூனியர் என்.டி.ஆர். ரூ.25 லட்சமும், மகேஷ் பாபு ரூ.25 லட்சமும், ராம் சரண் ரூ.30 லட்சமும், ராணா, வெங்கடேஷ் ஆகியோர் ரூ.1 கோடியும் வழங்கி இருக்கிறார்கள். சினிமா துறையை இயக்கும் தொழிலாளர்களுக்கு அனைவரும் உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!