கொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தம்

கொரோனா பீதியால் திரைப்படங்கள், சீரியல்கள் மற்றும் வெப் தொடர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் மேற்கு இந்திய சினிமா ஊழியர்களின் கூட்டமைப்பு, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கம் மற்றும் பல்வேறு திரைப்பட அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று மும்பையில் கூடி கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வருகிற 19-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை அனைத்து திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வலைதள தொடர் படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்க தலைவர் அசோக் பண்டித் கூறியதாவது:- கொரோனா வைரசை சமாளிப்பது குறித்து திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையின் முக்கிய அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்தினோம். நீண்ட விவாதத்திற்கு பிறகு வருகிற 19-ந்தேதி முதல் 31-ந் தேதி வரை அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளோம்.

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் படப்பிடிப்பில் உள்ளவர்கள் நாடு திரும்புவதற்காகவே 19-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சங்கங்கள் கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!