ராஜாவுக்கு செக் – விமர்சனம்

நடிகர் சேரன்
நடிகை நந்தனா வர்மா
இயக்குனர் சாய் ராஜ்குமார்
இசை வினோத் எஜமான்யா
ஓளிப்பதிவு எம்.எஸ்.பிரபு

சேரன் – சரயு தம்பதி மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நந்தனா என்ற மகள் இருக்கிறார். போலீஸ் அதிகாரியான சேரனுக்கு தூங்கும் வியாதி இருக்கிறது. மகள் நந்தனாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக சேரனிடம் ஒப்புதல் கேட்கிறார் மனைவி சரயு. ஆனால் சேரன், தனது மகள் 10 நாட்கள் தன்னுடைய வீட்டில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்.

இதற்கு சம்மதம் தெரிவிக்கும் சரயு, மகளை சேரனின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். 10 நாட்கள் சந்தோஷமாக தந்தை வீட்டில் வசிக்கும் நந்தனா, கடைசி நாளன்று கடத்தப்படுகிறார். சேரன் மீதான கோபத்தில், அவரது மகளை வில்லன் இர்பான் கடத்திவிடுகிறான். மகள் சீரழிக்கப்படுவதை வீடியோ லைவ்வில் பார்க்கவேண்டும் என்று சேரனை, வில்லன் டார்ச்சர் செய்கிறான். தூங்கும் வியாதியை மீறி வில்லனிடம் இருந்து மகளை சேரன் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அன்பான மகளை காப்பாற்றப் போராடும் தந்தையின் கதை தான் இது. சேரன், பாசமிகு தந்தையாக நடித்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சேரனுக்கு ஜோடி மலையாள ஹீரோயின் தான் என முடிவு செய்துவிட்டார்கள் போல இருக்கிறது. மலையாள நடிகை சரயு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

நடிகை சிருஷ்டி டாங்கேவிற்கு சிறிய கதாபாத்திரம் தான். சேரனின் மகளாக நடித்துள்ள நந்தனா, கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இர்பான் வில்லத்தனத்தால் மிரட்டுகிறார்.

இயக்குனர் சாய் ராஜ்குமார், திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்துள்ள விதம் சிறப்பு. இருப்பினும் மகள் சீரழிக்கப்படுவதை வீடியோ லைவ்வில் தந்தையை வில்லன் பார்க்க வைப்பது போன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். மற்றபடி பெரும் பொருட்செலவு இல்லாமல், சிம்பிளான கதைகளத்தில் படமாக்கியிருக்கிறார்.

ஓர் இரவில் நடக்கும் கதை என்பதால், எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது. வினோத் எஜமான்யாவின் இசையில் பாடல்கள் எதுவும் எடுபடாவிட்டாலும், பின்னணி இசையில் கவனிக்க வைக்கிறார்.

மொத்தத்தில் ”ராஜாவுக்கு செக்” பாசப் போராட்டம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!