தனது பிறந்தநாள் அன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்; கமல்ஹாசன்!!!


ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மரணம், கருணாநிதி உடல்நிலை என தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் மனதில் ஒரு எண்ணம் நிலவுகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. தலைவர்களிடையே உருவான மோதல் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டை வழி நடத்திச் செல்ல தன்னலமற்ற ஒரு தலைவர் வேண்டும் என்பதே மக்களிடம் உள்ள எதிர்பார்ப்பாகும். இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய பல தலைவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் ரஜினி தன் ரசிகர்கள் மத்தியில் தமிழக அசாதாரண சூழ்நிலை குறித்து பேசினார். எனவே ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ரஜினியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியல் மற்றும் ஊழல் குறித்து விமர்சனம் செய்தார்.


அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு விவகாரம், டெங்கு காய்ச்சல், நிலவேம்பு குடிநீர் என தொடர்ந்து அவரது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்து வருகிறார். கமல்ஹாசனின் டுவிட்டர் கருத்துகள் ரத்ன சுருக்கமாக இருந்தாலும் “சுளீர்” என அடி கொடுப்பது போல உள்ளது. சமூக வலைத்தளங்களில் இதற்கு ஆதரவு அதிகரித்தது.

இதற்கிடையே “பிக்பாஸ்” டி.வி. நிகழ்ச்சியிலும் கமல் ஹாசன் அரசியல் தொடர்பான கருத்துகளை சரவெடியாக வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக அவர் பேசுகையில், “அரசியலுக்கு வந்து விட்டேன்” என்று அறிவித்தார்.


கமல்ஹாசன் அரசியலுக்கு வருவாரா… அல்லது பேசிவிட்டு சத்தம் காட்டாமல் இருந்து விடுவாரா? என்று முதலில் மக்கள் மனதில் லேசாக சந்தேகம் இருந்து கொண்டிருந்தது. ஆனால் சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், “தமிழக அரசியலில் ஈடுபட போகிறேன். புதிய கட்சித் தொடங்குவது பற்றி பலரிடமும் ஆலோசித்து வருகிறேன்” என்றார்.

இதன் மூலம் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியானது.


இதையடுத்து கமல்ஹாசன் எப்போது அரசியலுக்கு வருவார்? எப்போது புதிய கட்சி தொடங்குவார்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் அவர் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசினார். மேலும் சென்னை வந்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கமலை சந்தித்து பேசினார். இதனால் அவர் வேறு கட்சியில் இணைவாரோ என்று மக்களிடையே குழப்பம் ஏற்பட்ட நிலையில், இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்ஹாசன், “நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன். புதிய அரசியல் கட்சிதான் தொடங்குவேன்” என்று அறிவித்தார். தனது அரசியல் பிரவேசம் இந்த ஆண்டு இறுதிக்குள் இருக்கும்” என்றும் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து தனது அரசியல் பயண தொடக்கத்துக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டார். அதற்காக சமீபத்தில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், கட்சிக்கான பெயரை தேர்வு செய்வதில் கமல் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியின் கொள்கை, சட்ட திட்ட விதிகள் என அனைத்தும் தயாராகி வருகிறதாம். மேலும் ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரசிகர் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், தனது கட்சி குறித்த அறிவிப்பை அவரது பிறந்தநாளான வருகிற 7-ஆம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் தன்னுடனும், மக்களுடனும் எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், தமிழகத்திற்கு கடமை செய்ய நினைப்பவர்களை தான் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே ரசிகர்கள் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு சென்னையில் நடைபெற இருப்பதாகவும், அதற்கான ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!