பச்சை விளக்கு – விமர்சனம்

நடிகர் மாறன்
நடிகை தீஷா
இயக்குனர் மாறன்
இசை தேவேந்திரன்
ஓளிப்பதிவு பாலாஜி

சாலை விதிகளை பற்றி பி.எச்.டி படித்திருக்கும் மாறன், சாலையில் சமூக சேவை செய்து வருகிறார். அப்போது ஹெல்மேட் அணியாமல் வரும் நாயகி தீஷாவிற்கு வித்தியாசமான முறையில் தண்டனை கொடுக்கிறார். இதிலிருந்து மாறன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் தீஷா.

ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், தீஷாவின் சகோதரி ஆபாச படம் எடுத்து மிரட்டும் கும்பலிடம் சிக்குகிறார். இதையறிந்த மாறன், தீஷாவின் சகோதரியை காப்பாற்ற முயற்சி செய்கிறார். இறுதியில் அந்த கும்பலிடம் இருந்து தீஷாவின் சகோதரியை காப்பாற்றினாரா? இல்லையா? அந்த கும்பலை மாறன் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் டாக்டர் மாறனே இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். முதல் பாதியில், சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் சொல்லியிருக்கிறார். பலருக்கும் தெரியாத விஷயத்தை சொன்னதற்கு பெரிய கைத்தட்டல். இரண்டாம் பாதியில் செல்போனால் ஏற்படும் தீமைகளையும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சொல்லியிருக்கிறார். தவறாக செல்போனை உபயோகப்படுத்தினால் மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.

படத்திற்கு பெரிய பலம் மாறனின் இயக்கம், வசனம், காட்சியமைப்பு என்றால், பலவீனம் இவரது நடிப்பு. இயக்கத்தில் காண்பித்த கவனத்தை நடிப்பில் கொஞ்சம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

நாயகியாக நடித்திருக்கும் தீஷா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். டிராபிக் போலீசாக வரும் இமான் அண்ணாச்சி சிந்திக்க வைத்திருக்கிறார். தாரா, மனோபாலா, நெல்லை சிவா, நந்தகுமார், நாஞ்சில் விஜயன் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

வேதம் புதிது தேவேந்திரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஒளிப்பதிவில் கவனிக்க வைத்திருக்கிறார் பாலாஜி.

மொத்தத்தில் ‘பச்சை விளக்கு’ பார்க்கலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!