பிழை – விமர்சனம்

நடிகர் நடிகர் இல்லை
நடிகை நாயகி இல்லை
இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா
இசை பைசல்
ஓளிப்பதிவு பாக்கி

சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் மூவரும் கல் உடைக்கும் தொழிலாளர்கள். தங்கள் மகன்களை நன்றாக படிக்க வைத்து வறுமை நிலையை போக்க வேண்டும் என்பது அவர்கள் கனவு. மகன்களோ ஒழுங்காக பள்ளிக்கு செல்லாமல் குறும்புத்தனம் செய்கின்றனர். வகுப்பில் முதலாவது வரும் மாணவனை கிணற்றுக்குள் தள்ளி விடுகின்றனர்.

குழந்தைகளை ஒழுங்காக வளர்க்கவில்லை என்று ஊர்க்காரர்கள் சண்டைக்கு வருகிறார்கள். இதனால் மனம் உடையும் சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் தங்கள் மகன்களை அடித்து விடுகின்றனர். இதனால் கோபித்துக்கொண்டு மூன்று சிறுவர்களும் சென்னைக்கு ஓடி விடுகிறார்கள். அங்கு எதிர்பாராத சிக்கல்களில் மாட்டிக்கொள்கின்றனர். அதில் இருந்து மீண்டார்களா? மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

காக்கா முட்டை ரமேஷ், நஷத், கோகுல், தர்ஷினி, நாகவேந்திரா சிரஞ்சீவி, பிருந்தா, அரவிந்த் காந்த், வினோத், அபிராமி ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளனர். மாணவர்களாக வரும் 3 சிறுவர்களின் குறும்புத்தனங்கள் ரசிக்க வைக்கின்றன. மூன்று தந்தைகளையும் அவர்களின் மகன்களையும் பற்றிய கதை. சார்லி, மைம்கோபி, ஜார்ஜ் ஆகிய மூவரும் ஏழை தந்தை கதாபாத்திரங்களில் வாழ்ந்து இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் மெதுவாக செல்லும் கதை நகரத்துக்கு நகர்ந்த பிறகு வேகம் எடுக்கிறது. படிப்பில் நாட்டம் இல்லாத மாணவர்களுக்கு பாடமாகவும் கதை நகர்ந்து இருக்கிறது. கல்வியின் மகத்துவத்தை சமூக அக்கறையோடு அழுத்தமான திரைக்கதையில் உயிரோட்டமாக காட்சிப்படுத்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.

பைசல் இசையில் பாடல்கள் மனதில் நிற்கிறது. பாக்கியின் ஒளிப்பதிவு காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது.

மொத்தத்தில் ‘பிழை’ நல்ல புரிதலை உண்டாக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!