ஹீரோயினே இல்லாமல் தமிழ் சினிமா, எப்படி இருக்கும்?

தற்போது வரும் படங்கள் பெரும்பாலும் ஹீரோயின் இல்லாத படங்களாகவே திரைக்கு வருகிறது.

காலத்திற்கு ஏற்ப தமிழ் சினிமாவில் டிரெண்ட் மாறிக்கொண்டே வருகிறது. ஒரு காலத்தில் காதலை மையப்படுத்தியே படங்கள் வெளியாகிக்கொண்டே இருந்தது. அதன் பிறகு பேய் படங்களாக வெளியானது. இடையிடையில் ஹீரோயினை மையப்படுத்தி படங்கள் வந்தது. அண்மை காலமாக விளையாட்டு தொடர்பான கதைகளை மையப்படுத்தி படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

இதில், ஒரு சில படங்கள் ஹீரோயின் இல்லாமல் ஹீரோவை மட்டும் மையப்படுத்தி வெளியாகி வருகிறது. இனிவரும் காலங்களில் தமிழ் சினிமாவில் இது போன்றுதான் படங்கள் இருக்கும் என்று அதிகளவில் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஹீரோயினை மையப்படுத்தி படங்கள் வெளியாகி வரும் பொழுது, ஏன் ஒரு கதை ஹீரோவை மட்டும் மையப்படுத்தி வரக்கூடாது? என்று கேள்வி ரசிகர்களிடையே எழுப்பப்படுகிறது. இதற்கு உதாரணமாக வந்த படம் தான் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7.

இந்தப் படத்திற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கென்னடி கிளப், கைதி, ஒத்த செருப்பு சைஸ் 7, ஜாம்பி ஆகிய படங்கள் ஹீரோயின் இல்லாமல் வெளியான படங்களாக பார்க்கப்படுகிறது. நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடிக்கும் பொழுது, ஹீரோக்களும், அதே பாணியில் நடிக்கத் தொடங்கிவிட்டனர். மாறாக, ஹீரோயினுடன் இணைந்து நடித்தாலும் அவர்கள் டம்மியாகவே காட்சிப்படுத்தப்படுகின்றனர். இதனால், அவர்களது மார்க்கெட் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அமலா பால், ஹன்சிகா மோத்வானி, த்ரிஷா, அனுஷ்கா, நயன்தாரா ஆகியோர் முன்னணி மாஸ் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த காலம் போய் தற்போது சாதாரண நடிகர்களுடன் இணைந்தோ அல்லது அவர்களுக்கு ஜோடியாகவோ நடிக்கும் நிலை வந்துவிட்டது. இவ்வளவு ஏன், சினிமாவை விட்டு வெளியேறும் நிலை கூட வந்துவிட்டது.

அண்மையில் வெளியான பிகில் படம் நயன்தாராவிற்கு போதுமான வரவேற்பு கொடுக்கவில்லை. இதனால் அவர் தர்பார் படத்தை நம்பியிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து நெற்றிக்கண் என்ற ஹீரோயின் தொடர்பான கதையில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெண்ணிலா கபடிக்குழு 2, கென்னடி கிளப், பிகில் ஆகிய படங்கள் விளையாட்டை மையப்படுத்தி வெளியான படங்கள். இந்தப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது மாஸ் நடிகர்களுக்கு ஜோடியாக வளர்ந்து வரும் நடிகைகள் தான் நடிக்கின்றனர். அவர்களது வரிசையில், மாளவிகா மோகனன், மடோனா செபாஸ்டியன் போன்ற வளர்ந்து வரும் நடிகைகள் மாஸ் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். தற்போது கூட விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் அவருக்கு ஜோடியாக கூட மாளவிகா மோகனன் தான் நடிக்கிறார்.

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இப்படி வளர்ந்து வரும் நடிகைகள் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நிலையில், மாஸ் நடிகைகள் ஹீரோயினை மையப்படுத்திய படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் படங்கள் தான் அவர்களது மார்க்கெட்டை உயர்த்துவதோடு, ரசிகர்களிடையே வரவேற்பையும் பெறுகிறது.

இது ஒரு புறம் இருக்க, இடையிடையில், ஹீரோயின் இல்லாமலும் படங்கள் வந்து கொண்டே இருப்பதால், தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்ட் மாற்றப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!