பிரபல நடிகரின் மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தி விட்டது..!! நடிகை குஷ்பு அனுதாபம்..!!


பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. இவர் பிரபல இந்தி நடிகர் ராஜ்கபூரின் சகோதரர். 1938-ம் ஆண்டு மார்ச் 18-ந்தேதி பிறந்த சசி கபூர் 4 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1970, 1980களில் ஏராளமான படங்களில் நடித்தார்.

மொத்தம் 116 படங்களில் நடித்துள்ளார். இந்தி நடிகை ஜெனிபர் கெண்டாவை 1958-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மனைவி ஜெனிபர் 1984-ல் மரணம் அடைந்தார். சசிகபூருக்கு மத்திய அரசு 2011-ம் ஆண்டு பத்மபூ‌ஷன் விருது வழங்கி கவுரவித்தது.

2015-ல் திரை உலகின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதை பெற்றார். சிறுநீரக கோளாறு காரணமாக மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணம் அடைந்தார். இன்று இறுதி சடங்கு நடைபெறுகிறது.

சசிகபூர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.

திரை உலகினரும் சசிகபூர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். திரை உலகிற்கு அவர் செய்த பணிகள் சினிமாவில் அவரது பங்களிப்பு ஆகியவற்றை அவர்கள் பாராட்டி உள்ளனர்.

சசிகபூருடன் இளம் வயதிலேயே சில படங்களில் குஷ்பு நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-


அவர் ஒரு சிறந்த மனிதர். அவரிடம் பழகிய அனைவருக்கும் இது தெரியும். நான் சில படங்களில் அவருடன் நடித்திருக்கிறேன். எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பார். அவரிடம் சோர்வையே கண்டது இல்லை.

அவருடன் பணிபுரிபவர்களை ஊக்குவிப்பார். அவர் முகத்தில் சோகத்தை பார்க்க முடியாது. அனைவரையும் நேசிக்கும் குணம் கொண்டவர்.

என்னைப் போன்ற இளையவர்களுக்கு அவரைப் போன்ற ஒருவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது அரிதானது. அவர் மிகவும் சக்தி வாய்ந்த ஹீரோவாக உருவானார்.

அவருடைய மரணம் பற்றிய செய்தியை கேள்விப்பட்டதும் எனது இதயம் மிகவும் நொறுங்கி விட்டது. ‘தீன்வார்’ படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்தார். இதில் சசிகபூர் வேடம் சிறப்பாக இருந்தது. இதுபோன்று அவர் நடித்த மற்ற படங்களிலும் தனது திறமையை நிரூபித்தார்.

அவர் அழகானவர். காஷ்மீரில் படப்பிடிப்பு நடக்கும்போது அந்த சூழ்நிலையில் அவருடைய முகம் ரோஸ் நிறமாக மாறிவிடும். அங்கு எங்களுடன் நேரத்தை செலவிடுவார்.

பல வருடங்களுக்கு முன்பே நடிப்பை நிறுத்தி விட்டார். என்றாலும் எல்லோரிடமும் தொடர்பு கொண்டிருந்தார். நான் சிறு பெண்ணாக இருந்தபோது நான் சிரிப்பதை பார்த்து ரசிப்பார். எனது உறவினர்கள் சிலர் அவரைப் போன்ற கணவர் வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். கடைசியாக 3 வருடங்களுக்கு முன்பு அவரை சந்தித்தேன். என்றாலும் அவருடன் தொடர்பில் இருந்தேன். சசிகபூரை என்றும் மறக்க முடியாது.

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.- Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!